வாழ்நாள் கல்வி

காய்கறி சாகுபடி

செடிமுருங்கை சாகுபடி தொழில் நுட்பங்கள்

காய்கறி சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

முருங்கை பருவ சூழல் மாற்றத்திற்கு ஏற்ற பயிராகும். இதில் இரண்டு வகை உண்டு. அவை செடி முருங்கை, மரம் முருங்கை எனப்படும். இவை வெப்ப மண்டல பயிராக இருப்பதால் அதிக வெப்ப நிலையிலும் குறைந்த நீரிலும் வளர்ந்து மகசூல் தரக்கூயது. இதனுடைய இலைகள், காய்கள் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்யலாம். ஆகவே விவசாயிகள் அனைவரும் முருங்கை விவசாயம் செய்து அதிக லாபம் பெறலாம். 

 

ரகம்

பி.கே.எம். 1 

 

பட்டம்

புரட்டாசி,  ஐப்பசி

 

அடியுரம்

ஒரு ஏக்கருக்கு மக்கிய தொழு உரம் 10 டன் போட வேண்டும் அல்லது ஊட்டமேற்றிய தொழுவுரம் 2 டன், அல்லது மண்புழு உரம் 1 டன் போட வேண்டும்.

 

விதை அளவு

200 கிராம் / ஏக்கர்.

 

விதை நேர்த்தி

அரைகிலோ அசோஸ்பைரில்லம், அரைக்கிலோ பாஸ்போபாக்டீரியாவை  5 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசலில் விதையினை நடுவதற்கு  ஒரு நாள் முன்பாக ஊறவைத்து நடலாம்.

 

பயிர் இடைவெளி

செடிக்குச் செடி 6 அடி,  வரிசைக்கு வரிசை 6 அடி

 

நடவு முறை

தனிப் பயிராகவும் நடவு செய்யலாம், ஊடு பயிராகவும் நடவு செய்யலாம்.

 

ஊடு பயிர்

ஊடு பயிராக தக்காளி, நிலக்கடலை, வெங்காயம், முள்ளங்கி, கொத்தவரை போன்ற குறைந்த உயரம் வளரக்கூடிய பயிர்களை பயிரிடலாம்.

 

உயிர் உரம்

3 கிலோ அசோஸ்பைரில்லம், 3 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ பேசிலஸ், 2 கிலோ பெசிலியோமைசிஸ், 1 டன்   மக்கிய தொழுவுரம் சேர்த்து  நன்கு கலந்த கலவையை  ஒரு குழியில் 2 கிலோ வீதம் வைத்து விதையை நடவேண்டும். நடவு செய்தது போக மீதம் உள்ள விதையை பாலித்தீன் கவரில் நடவு செய்து நாற்றாக வளர்க்க வேண்டும். இந்நாற்றினை விதை முளைக்காமல் இருக்கும் இடத்தில் நடவு செய்தால் எல்லா மரமும் ஒரே சீராக இருக்கும்.

 

உர நிர்வாகம்

60 வது நாளில் ஒரு செடிக்கு 150 கிராம் டி.ஏ.பி,  100 கிராம் அமோனியம் சல்பேட்,    100 கிராம் பொட்டாஷ் மூன்றையும் கலந்து செடிக்கு அருகில் இட்டு மண் அணைக்க வேண்டும். தண்ணீர் பாய்ச்சும் பொழுது ஏதாவது ஒரு காய்கறி பயிர்களுக்கான நுண்ணூட்ட சத்தை ஒரு செடிக்கு 30 கிராம் என்ற அளவில் இட்டு தண்ணீர் விட்டால் மகசூல் அதிகரிக்கும்.

 

களை நிர்வாகம்

ஆட்கள் மூலம் களை வெட்டலாம். நிலப்போர்வை போட்டு களையை கட்டுப்படுத்தலாம். உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயிர்களை ஊடுபயிராக  சாகுபடி செய்தால் களையை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம். இயற்கை களைக் கொல்லிகளை பயன்படுத்தலாம். விவசாய களையெடுக்கும் கருவிகளைக் கொண்டும் களைகயை வெட்டி கட்டுப்படுத்தலாம்.

 

நீர் நிர்வாகம்

பொதுவாக முருங்கை  வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராக இருந்த போதிலும் பிஞ்சு வரும் காலங்களில் தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம். செம்மண்ணாக இருந்தால் 10 நாட்களுக்கு ஒரு முறையும், கரிசல் மண்ணாக இருந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறையும்  நீர் பாய்ச்ச வேண்டும்.

 

பூச்சி கட்டுப்பாடு

பச்சைப்புழு தாக்குதலின் அறிகுறி

பச்சை புழு முருங்கை மரத்தின் இலையின் பச்சையத்தை சுரண்டி சாப்பிடுவதால்  இலை  கண்ணாடி போன்று காணப்படும். 

கட்டுப்படுத்தும்முறை

இயற்கை முறையில் இஞ்சி அரைக்கிலோ, பூண்டு ஒரு கிலோ,  பச்சை மிளகாய் அரைக்கிலோ அளவில் எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற அளவில் கலந்து ஒட்டு பசை சேர்த்து தெளிக்க வேண்டும்.  அல்லது
 
50 மில்லி வேப்ப எண்ணெய், 50 மில்லி புங்க எண்ணெய், 50 மில்லி இலுப்ப எண்ணெய், ஒட்டுப்பசையும் சேர்த்துக் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
 
அல்லது மோனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

 

வேர்அழுகல்

அறிகுறி

மரத்தில் உள்ள இலைகள் பழுத்து மரம் வாடிக் காணப்படும். மேலும் இம்மரத்தில் உள்ள காய்கள் சுருங்கி காணப்படும்.. மரத்தின் வேர்ப்பகுதி பாதிக்கப்..படுவதால் காற்று அடித்தால் மரம் ஒடிந்து விடும்.

இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை
 

டிரைக்கோடெர்மா விரிடி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம், சூடோமோனஸ் 10 கிராம் என்ற அளவில் கலந்து ஒரு மரத்திற்கு ஒரு லிட்டர் வீதம் ஊற்ற வேண்டும்..அல்லது

இரசாயன முறையில்  கட்டுப்படுத்த

கார்பன்டிசியம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் செடியின் தண்டுப்பகுதி நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும்.

 

மரத்தில் பிசின் வடிதல்

அறிகுறி

பழ ஈ,  மரம் மற்றும்  காயை தாக்கும் பொழுது  பிசின் போன்ற திரவம் வடியும்  இதனால் காயின் தரம் குறைந்து காணப்படும்.  விற்பனைக்கு உகந்ததாக இருக்காது  ஆகவே வருமானம் பாதிக்கும்.
  
இவற்றை கட்டுப்படுத்தும் முறை

இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 5 இடங்களில் வைத்து பழ ஈயை கவர்ந்து அழிக்கலாம். 

 

முக்கிய குறிப்புகள்

2 ½ அடி செடி வளர்ந்த பின்பு செடியின் நுனியை கிள்ளி விட வேண்டும். 20 கிளைகள் வரும் வரை கொழுந்து கிள்ள வேண்டும்.

வயலில் தேனீ பெட்டி வைத்தால் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புண்டு
.
நன்கு புளித்த தயிர் 100 மில்லி, பெருங்காயத்தூள் 10 கிராம் (ஒரு டேங்க்) 10 லிட்டர் தண்ணீர்  என்ற விகிதத்தில்  கலந்து  காலை அல்லது மாலை வேளையில் தெளித்தால் பூ உதிராமல் இருக்கும். அதனால்  20 சதம் வரை மகசூலை அதிகப்படுத்தலாம்.

இரசாயன மருந்துகள் அடிக்கும் பொழுது மாலை வேளையில் தான் தெளிக்க வேண்டும். ஏனென்றால் காலை நேரத்தில் தேன் வண்டுகள் வயலுக்கு வரும். அவை மருந்து தெளிக்கும்போது இறக்க நேரிடும்.

தேன் வண்டுகள் இறந்து விட்டால்  மகரந்த சேர்க்கை நடைபெறாது. அதனால் மாலை நேரத்தில் மருந்து தெளித்தால் மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது.

நல்ல தரமான காய்களாக உற்பத்தி செய்தால் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
 
முருங்கையில் விதை உற்பத்தி செய்து விதையாக விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

 

முடிவுரை

முருங்கை சாகுபடியை தகுந்த நேரத்தில் சரியான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சாகுபடி செய்தால் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம்.