பணப்பயிர் சாகுபடி
முன்னுரை
பயிர் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகிறது இவைகளில் சில சத்துக்கள் பயிர்களின் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் இவை பேரூட்டச் சத்துக்கள் என அழைக்கப் படுகிறது. சில சத்துக்கள் பயிர்களின் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படுகிறது இவை நுண்ணூட்டச் சத்துக்கள் எனப்படும். ஒவ்வொரு பயிரிலும் வெவ்வேறான சத்துக்கள் தேவைப்படும் அதில் பருத்தி பயிருக்கு தேவைபடும் நுண்ணூட்டச் சத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மெக்னீசியசத்து குறைபாடு
செடியின் அடிப்பாகத்தில் உள்ள இலைகள் குங்குமச் சிவப்பு நிறமாக மாறும், ஆனால் நரம்புகள் பச்சை நிறமாகவே காணப்படும். இலைகள் முதிரும் முன்பே உதிர்ந்து விடும்.
நிவர்த்தி செய்ய : 20 கிராம் மெக்னிசியம் சல்பேட்டை 10 கிராம் யூரியாவுடன் சேர்த்து ஒரு லிட்டர் நீரில் கரைத்து குறைபாட்டு அறிகுறிகள் மறையும் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
போரான் சத்து குறைபாடு
பருத்தி செடியின் நுனியில் உள்ள கிளைகள் அடர்த்தியாகத் தோற்றமளிக்கும். காய்கள் காய்ப்பது குறைந்துவிடும். காய்கள் சீக்கிரமாக முதிர்வடையாமல் வளர்ச்சி குறைந்து காணப்படும். இதனை நிவர்த்தி செய்ய 3 கிராம் போராக்ஸ்னை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து பூ மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் இலை வழி ஊட்டமாக இரண்டு முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
துத்தநாகச்சத்து குறைபாடு
இலையின் நரம்புகளுக்கு இடையே பழுப்பு கலந்த மஞ்சள் நிறமாக இருக்கும். நுனி கிளையில் இலைகள் அடர்த்தியாக இருக்கும். செடியின் அடிப்பாகத்தில் இருக்கும். இலைகள் தடித்து அப்பளம் போன்று நொறுங்கும் தன்மையுடன் இருக்கும். சில சமயம் அடிப்பாகத்தில் இலைகள் இருக்காது. இதனை நிவர்த்தி செய்ய 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கலந்து குறைபாடு மறையும் வரை 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
சாம்பல்சத்து குறைபாடு
குறைபாடுள்ள நிலத்தில் பருத்தியின் இலைகளின் விளிம்புகள் காய்ந்து காணப்படும் மேலும் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். 10 கிராம் பொட்டாசியம் குளோரைடு உப்பினை ஒரு லிட்டர் நீருடன் கலந்து பருத்தி பூக்கும் போதும், பருத்தி வெடிக்கும் போதும் தெளிக்க வேண்டும். அல்லது மல்டிகே என்ற டானிக்கினை 200.மிலி எடுத்து 200 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
நுண்ணூட்டக் கலவை இடுதல்
வேளாண் துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணூட்டக் கலவையை 12.5 கிலோ சுமார் 50 கிலோ மணலுடன் கலந்து விதைச் சாலில் தூவவேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நுண்உரக் கலவையை 7.5கிகி ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக்கலவை மற்றும் தொழுவுரம் சேர்த்து தகுந்த வெப்பநிலையில் ஒரு மாதம் நிழலில் உலர்த்தவும்.பிறகு விதைக்கவும்.
நுண்ணாட்டச்சத்து மிக்க செடிவகைகள்
புளி, வாதநாராயணன், சீமைக் கருவேல் இலையில் துத்தநாகமும், கீரை வகைகளில் இரும்புச்சத்தும், தாமிரச் சத்து ஆவாரம் செடியிலும், கால்சியம் மற்றும், அயோடின் சத்துக்கள் வெண்டையிலும், கல்லி, கற்றாழை, எருக்கு போன்றவற்றில் போரான் சத்தும் அதிகம் உள்ளது. எனவே இந்தத் தழைகளை 10 கிலோ அளவு எடுத்து ழுழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து 1 கிலோ வெல்லம் சேர்த்து 7 நாட்கள் ஊற வைத்து மாலை நேரத்தில் தெளிக்கலாம்.
தொகுப்புரை
பருத்தி சாகுபடியில் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையை கண்டறிந்து அதற்கான நிவர்த்தி முறைகளை பின்பற்றி செலவை குறைத்து அதிக வருமானத்தை பெருக்குவோம் .