வாழ்நாள் கல்வி

பணப்பயிர் சாகுபடி

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல்

பணப்பயிர் சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பருத்தி ஒரு பணப்பயிராக இருப்பதால்  விவசாயிகள் தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்தில்  பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.  பருத்தி சாகுபடி செய்யும் போது அவற்றில்  சாறுஉறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல்  அதிக சேதத்தை உண்டு பண்ணுகிறது இவற்றை தடுக்கவும் மண்வளத்தை பாதுகாக்கவும் முடிந்த அளவு செலவை குறைத்து இயற்கை முறையில் சாறுஉறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தி அவற்றிலிருந்து பயிரை பாதுகாப்போம்.

 

சாறு உறிஞ்சும் பூச்சியின் வகைகள்

அசுவிணி,  வெள்ளை ஈ, இலைப்பேன், தத்துப் பூச்சி போன்றவை  பருத்தியில் அதிகமாக காணப்படும்

 

அசுவுனி

வாழ்க்கைப் பருவம் தாய்ப் பூச்சியானது 2-3 வாரங்கள் வரை உயிர் வாழும். ஓரு நாளில் 8 முதல் 22 குஞ்சுகள் பொறிக்கும். இனச்சேர்க்கை இல்லாமல் இறக்கையுடனோ அல்லது இறக்கை இல்லாமலோ குஞ்சுகளை உற்பத்தி செய்யும். குஞ்சுகளின் பருவம் 7-9 நாட்கள், ஒரு வருடத்திற்கு அதன் வாழ்க்கையில்  12 - 14  முறை குஞ்சுகள் பொறிக்கும் தன்மையுள்ளது

 

தாக்குதலின் அறிகுறிகள்

அசுவுனியின் தாக்குதல் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தீவிரமாக காணப்படும்.  அசுவுனி கருப்பு, அல்லது பழுப்பு நிறத்திலும்  அதன் குஞ்சுகள்  மஞ்சள் அல்லது பச்சை நிறத்திலும் இருக்கும். இவைகள் இளம் இலைகளின் அடிப்பகுதியிலும், குருத்துக்கள், மொட்டுக்களில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலை  மேல் நோக்கி சுருண்டு விடும். இலையிலுள்ள பச்சையத்தை உறிஞ்சுவதால் இலைகள் வெள்ளை நிறமாக மாறும். நுனி மொட்டுக்களில் சாறுகளை உறிஞ்சவதால் மொட்டுக்கள் வடிவம் ஒழுங்கற்று மாறி கொட்டிவிடும்.அசுவுனிகள் வெளியிடும் கழிவுப்  நீர் போன்ற  திரவத்தை உண்பதற்காக எறும்புகள் வந்து மொய்க்கும். இதனை உற்று கவனித்தால் அசுவுனியின் தாக்கத்தைக் காணலாம். இதனால் ஏற்படும் பொருளாதார சேதநிலை 15-20 சதவீதம்  ஆகும்.

 

கட்டுப்படுத்தும் முறை

  • ஏராளமான பொறி வண்டுகள் மற்றும் ஒட்டுண்ணிகள் அசுவுனியைத் தின்று அதன் எண்ணிக்கையை இயற்கையாகவே ஓரளவு குறைக்கின்றன. 
     
  • தட்டைப்பயறு, மக்காச்சோளம் போன்றவற்றை ஊடுபயிராக ஒரு வரிசையும் பருத்திப் செடி ஆறு வரிசை என்ற விகிதத்தில் நடவும். 
     
  • வீட்டில் கிடைக்கும் சாம்பலை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு அசுவுனி இருக்கும் செடியில்  அனைத்து பாகத்திலும் நன்கு படுமாறு தூவ  வேண்டும்.
     
  • அசுவுனியை கவர்ந்து அழிக்க ஒரு ஏக்கருக்கு 10 ஊதா  நிறமுள்ள ஒட்டுப்பொறி அட்டையை  வயலில் 15 அடி இடைவெளிக்கு ஒன்றாக  பயிரின் உயரத்தை விட ஒரு அடி உயரம் சேர்த்து கட்டி அசுவினி கவர்ந்து அழிக்கலாம். 
     

இரசாயன முறையில் கட்டுப்படுத்த
 
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி இமிடாகுளோர், அசிபேட் 2 கிராம் கலந்து  காலை மற்றும் மாலை வேளையில்  தெளித்து கட்டுப்படுத்தலாம்.

யிரியல் கட்டுப்பாட்டு முறை

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வெர்டிசீலியம் மற்றும் பிவேரியா என்னும் பூஞ்சாணங்களை ஒன்றாகக் கலந்து காலை மற்றும் மாலை வேளையில்  தெளித்க்கலாம். 

 

வெள்ளை ஈ

சிறிய கொசு போன்ற வெண்ணிற பூச்சிகளும் அவற்றின் இளம் பருவங்களும் இலையின் அடிப்பரப்பில் காணப்படும்.வெள்ளை ஈயின் இளம் குஞ்சுகளும் வளர்ந்த ஈக்களும் இலையிலிருந்து சாறு உறிஞ்சுவதால் இலைகள் சுருண்டு மஞ்சள் நிறமாக மாறுகிறது  கோடைகாலத்தில் அதிகமாக காணப்படும்.

 

 

வாழ்க்கைப் பருவம்

இப்பூச்சியானது ஆண்டு முழுவதும் இனவிருத்தி செய்யும். பெண் ஈ இளம் தளிர் இலைகளின் அடிப் பகுதியில் மஞ்சள் நிற  முட்டைகளை இடும். முட்டையில் இருந்து ஒரு வார காலத்தில் குஞ்சுகள் வெளிப்படும். குஞ்சுகள் நீள் வட்ட வடிவில் இருக்கும். இலையின் அடிப்பகுதியில் அசைவற்று ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். இது முழு வளர்ச்சி பெற 14-28 நாட்கள் ஆகும். ஓரு ஆண்டில் 12-15 வாழ்க்கை முறை இருக்கும். வளர்ந்த ஈ வெள்ளை நிற இறக்கைகளுடன் இருக்கும்.

தாக்குதலின் அறிகுறிகள்

இளம் குஞ்சுகளும் வளர்ந்த ஈக்களும் இலையின் அடிப் பாகத்தில் வெண்மை நிறத்தில் காணப்படும்  இலையின் சாற்றை உறிஞ்சி சேதத்தை உண்டு பண்ணும். வெள்ள ஈக்கள் அதிக அளவில் சேதம் தரும் நிலையில் இலைகள் வளர்ச்சி பெறாத நிலையிலேயே காய்ந்து கருகி உதிர்ந்து விடும். நாளடைவில் மொட்டுகளும், மலர்களும் உதிர்ந்து விடும். செடியின் வளர்ச்சி குன்றிவிடும். தாக்கிய காய்கள் வெடிக்காது. பஞ்சின் தரம் குறைந்து விடும்.  வெள்ளை ஈ கழிவுத் திரவத்தை  வெளியிடுவதால் பஞ்சின் தரம் குறைகிறது. வெள்ளை ஈ கோடைகாலங்களில் அதிகமாக தென்படும்.  மேலும் இது நச்சுயிரி நோயை பரப்ப வல்லது.  பொருளாதார சேத நிலை 10 லிருந்து 20 சதவீதமாகும்.

கட்டுப்படுத்தும் முறை

ஊடுபயிர் சாகுபடி

  • தட்டைப்பயறு, மக்காச்சோளம் போன்றவற்றை ஊடுபயிராக ஒரு வரிசையும் பருத்திப் செடி ஆறு வரிசை என்ற விகிதத்தில் நடவும். 
  • மஞ்சள் நிற ஒட்டுப்பொறி ஒரு ஏக்கருக்கு 10 இடத்தில் வைத்து  வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்
  • தாவர இலைச்சாறு அல்லது வேப்பங்கொட்டைச் சாறு அடிக்கலாம் (இவை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

உயிரியல் கட்டுப்பாட்டு முறை

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வெர்டிசீலியம் மற்றும் பிவேரியா என்னும் பூஞ்சாணங்களை ஒன்றாகக் கலந்து காலை மற்றும் மாலை வேளையில்  தெளித்க்கலாம். 

இரசாயன முறையில் கட்டுப்படுத்தும்முறை

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் பிரைடு   அல்லது  அட்டாரா 5 கிராம் கலந்து மாலை வேலையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

இலைப்பேன்

வாழ்க்கைப் பருவம்

இலைப்பேன்  மஞ்சள் நிறமுடைய தட்டையான மிகச்சிறிய பூச்சியாகும்.  வாரத்திற்கு இப்பூச்சிகள் 50-60 முட்டைகளை செடிகளில் இலைகளில் இடும். முட்டையிலிருந்து 5 நாட்களில் குஞ்சுகள்  வெளிவரும்.  குஞ்சுகளின் வாழ்க்கை பருவம் 5 நாட்கள். அதற்கு பின்பு கூட்டுப் புழுப் பருவம் 2 நாட்கள்  ஆகும்.  கூட்டுப் புழுவாக  இருப்பது 3-4 நாட்களில் இலைப்பேனாக மாறும் ஒரு ஆண்டில் அதிக வாழ்க்கை  சுழற்சியினை கொண்டது.

தாக்குதலின் அறிகுறி

இலைப்பேனின் குஞ்சுகள் மற்றும் தாய்ப் பூச்சிகள் இலைகளைச் சுரண்டி சாற்றை உறிஞ்சுகின்றன. முதலில் அடிப் பாகம் பளபளப்பு அடைந்து வெள்ளி போன்ற புள்ளிகள் தோன்றும். இதனால் இலைகள் நன்கு விரிவடையாமல் மேல் நோக்கிச் சுருளும். சில சமயங்களில் இலைகள் மொர மொரப்பு அடைந்து சிவப்பு கலந்த பழுப்பேறி உதிர்ந்து விடும். (இதையே செம்பான் நோய் என்பர்) நல்ல மழை பெய்தால் இலைகளிலிருந்து இப்பூ10ச்சிகள் எளிதில் அழிக்கப்படும்.


கட்டுப்படுத்தும் முறை 
 

  • ஊடுபயிர் சாகுபடி  தட்டைப்பயறு, மக்காச்சோளம் போன்றவற்றை ஊடுபயிராக ஒரு வரிசையும் பருத்திப் செடி ஆறு வரிசை என்ற விகிதத்தில் நடவும். 
  • மஞ்சள் நிற ஒட்டுப்பொறி ஒரு ஏக்கருக்கு 10 இடத்தில் வைத்து  வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
  • தாவர இலைச்சாறு அல்லது வேப்பங்கொட்டைச் சாறு அடிக்கலாம் (இவை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
  • ஒரு ஏக்கருக்கு 50 கிலோ  எண்ணெய் எடுக்காத வேப்பம் புண்ணாக்கு பயிர் நடவு செய்த ஆரம்பத்தில் செடிக்கு அருகில் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இரசாயன முறையில் கட்டுப்படுத்த

ஒரு லிட்டர் தண்ணீருக்கு புரப்பனாபாஸ் 2 மில்லி மற்றும் நிம்பிசிடின்  2 மில்லி கலந்து அடிக்கலாம் 

 

தத்துப்பூச்சி

வாழ்க்கைப் பருவம்

தத்துப்பூச்சி சிறிய பச்சை நிறமுடைய பெண் தத்துப்பூச்சி மஞ்சள் நிறமுடைய முட்டைகளை இலையின் அடிப்பகுதியில் உள்ள நரம்புகளில் இடும். முட்டையிலிருந்து 4-5 நாட்களில் குஞ்சுகள் வெளிப்படும். குஞ்சுகள் 10-15 நாட்களில் தாய்ப்பூச்சிகள் மாறும்.  பின்பு தாய் தத்துப்பூச்சி 2-3 வாரங்கள் வரை உயிர்வாழும். ஒரு வருடத்தில் 7-8 முறை வாழ்க்கை சுழற்சி இருக்கும்.

தாக்குதலின் அறிகுறிகள்

தத்துப்பூச்சி இலையின் அடிப் பாகங்களிலும், இளம் குருத்துகளிலும் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி உண்ணும். இதனால் இலைகள் சிகப்பு அல்லது பழுப்பு நிறமாகி கீழ் நோக்கி சுருளும். அதிகம் சேதாரம் அடைந்த நிலையில் இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக தாக்குதல் காணப்படும். இதனால் ஏற்படும் பொருளாதார சேதநிலை        20 - 30 சதவீதம்  ஆகும்.

கட்டுப்படுத்தும் முறை

  • ஊடுபயிராக மகரந்தம் அதிகம் உள்ள பயிர்களை நடவு செய்யலாம் (மக்காச்சோளம், சூரியகாந்தி)
  • மஞ்சள் நிறப் ஒட்டுப்பொறி அட்டை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
  • விளக்குப்பொறி  வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
  • வேப்பங்கொட்டைச்சாறு அல்லது தாவர இலைச்சாறு  அடிக்கலாம்

(இவை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

இரசாயனமுறையில் 

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி  இமிடா குளோரைடு  மற்றும் அசிபேட் 2 கிராம் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம் 

 

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

  • கோடை உழவு செய்து கூட்டுப்புழுவின் பருவத்தை அழிக்கலாம்.
  • ஊடுபயிராக  மக்காச்சோளம், சூரியகாந்தி, கொத்தவரை, வெங்காயம், மற்றும் மகரந்தம் அதிகம் உள்ள பயிர்களை சாகுபடி செய்யலாம். 
  • மஞ்சள்  மற்றும் ஊதா நிறமுள்ள  ஒட்டுப்பொறி  வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • நன்மை செய்யக் கூடிய பொறி வண்டுகளை வாங்கி வயலில் விடலாம் அல்லது அவை பெருகுவதற்கான பயிர்களை வளர்க்கலாம் ( தட்டப்பயறு, சென்டுமல்லி)
  • பருத்தி எடுத்து முடிந்த பின்  பருத்திச் செடிகளை நிலத்திலிருந்து அகற்றாமல்  விட்டு வைப்பதும், பூச்சி தாக்குதல் தொடர்வதற்கு வாய்ப்பளிக்கும்.
  • சரியான பருவத்தில்  பருத்தி விதையை விதைக்க வேண்டும்.  சாறுஉறிஞ்சும் பூச்சி தாக்குதலை எதிர்ப்பு தன்மை உள்ள ரகங்களை  பயிரிட வேண்டும்.
  • அதிகமாக தழைச்சத்தும்  இடுவதும் அளவுக்கு அதிகமாக நீரும் பாய்ச்சுதலும்  இலைகளை பச்சையத்தை அதிகரிக்கும். முற்றும் சாறுஉறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகும்.
  • பருத்தி வயலையும், வரப்பையும் களைகளின்றி சுத்தமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட இலை, மொட்டு, பூ காய் போன்றவற்றை வாரம் ஒரு முறை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து தக்க பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • பூச்சிகளின் பொருளாதார சேத நிலையை அறிந்து தேவையானால் மட்டும் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.
  • பயிரின் வயது மற்றும் வளர்ச்சியைப் பொறுத்து தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 முதல் 100 மில்லி வரை  கலந்து  காலை அல்லது மாலை வேளையில் அடிக்கலாம்.

 

 

தாவர இலைச்சாறு தயாரிக்கும் முறை

  • பால் வரக்கூடிய தாவரங்கள் -எருக்கு, காட்டாமணக்கு, பப்பாளி
  • கசப்பு தன்மையுள்ள தாவரம் - வேம்பு, சிறியாநங்கை, சோற்றுக் கற்றாளை
  • ஆடு, மாடு கடிக்காத தாவரம்- ஆடாதோடை, ஆவாரை, நெய்வேலி காட்டாமணக்கு 
  • பூச்சி நோய் தாக்காத தாவரம் -  புங்கம் விதை. மஞ்சணத்தி, 
  • மணமுள்ள தாவரம்- நொச்சி துளசி  

ஒவ்வொரு வகைகளிலும எளிதாக கிடைக்கக் கூடிய  ஏதாவது ஒரு தாவரத்தை  ஒரு கிலோ அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக ஐந்து வகைகளிலும் சேர்த்து ஒரு ஏக்கருக்கு 5 கிலோ இலைகள் இருந்தாலே போதும்.

செய்முறை 

  • இலைகளை நன்றாக உரலில் போட்டு இடித்து அவை மூழ்கும் அளவு தண்ணீர் உற்றி ஒரு மண்பானையில் வைக்கவும். 
  • அவற்றில் ஒரு லிட்டர் கோமியம், (நாட்டு மாட்டுக் கோமியம் சிறந்தது) 100 மில்லி பெருங்காய தூளையும் சேர்த்து கலக்கி பானையை ஒரு துணியால் நன்றாக கட்டி வைக்க வேண்டும். 
  • தினமும் காலை, மாலையில் நன்றாக கலக்கி பிறகு மூடி வைக்கவும் ஒரு வாரம் கழித்து அவற்றை  எடுத்து வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற அளவில் கலந்து  காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

கோமியம் - பூச்சிகளை விரட்டும் மற்றும் தாவர இலைகளை நொதிக்க வைக்கும் 
பெருங்காயம் - பூக்கள் உதிர்வதை தடுக்கும்
தாவர இலைச்சாறு - பூச்சிகளை உண்ண விடாமல் விரட்டும் 
இவற்றை பயிர் நடவு செய்த 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து தெளித்து வந்தால்   மேலே உள்ள பூச்சிகளை  வரவிடாமல் தடுக்கலாம் அவற்றின் தாக்குதல் இல்லாமல் இருந்தாலே நல்ல மகசூல் கிடைக்கும்  இவை இயற்கை பயிர்  வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.

 

தொகுப்புரை

விவசாயிகள் பூச்சியின் வகையையும் மற்றும் அதன்  தாக்குதலை கண்டறிந்து ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறையை கையாண்டால் இடுபொருள் செலவினைக் குறைக்கலாம் பூச்சி தாக்குதலினால் ஏற்படும் மகசூல் இழப்பிணை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம்.