வாழ்நாள் கல்வி

கால்நடை வளர்ப்பு

பால் காய்ச்சல்

கால்நடை வளர்ப்பு

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பால் காய்ச்சல் என்று பரவலாக பேசப்படும் இது ஒரு சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறையாகும். பொதுவாக இந்த பாதிப்பு முதல் மற்றும் இரண்டாவது ஈற்று ஈன்ற பால்மாட்டைத் தாக்குவதில்லை மூன்றாவது ஈற்று மற்றும் அதற்குமேல் கன்று ஈன்ற பால் மாட்டைத் தாக்குகிறது. பொதுவாக சினைகாலத்தில்  பால் மாட்டை சரிவர பராமரிக்காததும் ஒரு காரணம் அத்துடன் கன்று ஈன்ற உடன் சீம்பாலுடன் அதிக கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்து வெளியேறுவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த பாதிப்பு கன்று ஈன்ற ஒரு சில தினங்களுக்குள் ஏற்படும்.

 

பால் காய்ச்சலுக்கான அறிகுறிகள்

 • பால்காய்ச்சல்நோய்பாதிக்கப்பட்ட பால்மாட்டின் உடல் வெப்பம் குறைந்துவிடும்
 • பால் மாடு பதட்டமாக காணப்படும்
 • உடல் நடுங்கும்
 • உணவு உட்கொள்ளாது
 • வயிற்றுப் பகுதி தசை நடுங்கும்
 • தலையை ஆட்டும்
 • கழுத்தை இடது பக்கமாக மடித்து வைத்துக் கொள்ளும்
 • நாக்கை வெளியே நீட்டும்
 • பற்களை கடிக்கும்
 • எழுந்து நிற்காது
 • சாணம் போடாது
 • சிறுநீர் கழிக்காது
   
மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சைக்கு ஆவன செய்தல் வேண்டும். தீவிரமான பால் காய்ச்சலை கவனித்து மருத்துவம் செய்யத் தவறினால் பால் மாடு மரணம் அடைய வாய்ப்புகள் இருப்பதால் உடனடியாக மருத்துவம் செய்தல் அவசியம்.
 

பால் காய்ச்சல் வராமல் தடுக்கவழி முறைகள்

 • சினைக் காலத்தில் முறையான பராமரிப்பு
 • உலர் தீவனம் அதிகம் கொடுத்தல்
 • அகத்திக் கீரை கொடுத்தல்
 • பால் மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 கிராம் வரை கால்நடை களுக்கான தாது உப்பு தொடர்ந்து கொடுத்தல்
 • தெளிந்த சுண்ணாம்பு நீர் கொடுத்தல். ஆகியன இந்த பாதிப்பு வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும்.
 

பால் காய்ச்சலை சரி செய்ய மருத்துவம்

பாதிப்பிற்கு உள்ளான பால்மாடு நடக்க இயலாத நிலையில் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரை வரவழைத்து மருத்துவம் செய்ய வேண்டும். மருத்துவர் பாதிப்பிற்கு உள்ளான பால்மாட்டிற்கு கால்சியம்சத்து ஊசியை நரம்பு வழியாக இரத்தத்தில் செலுத்துவார். நரம்பு வழியாக கால்சியம்  ஊசி செலுத்திய  உடன் பால் மாடு

 • சிறுநீர் கழிக்கும்
 • சாணம் போடும்
 • தலையை தூக்கும்
 • வயிற்றுப் பகுதியில் காணப்பட்ட தசை நடுக்கம் குறையும்
 • உடனடியாக எழுந்து நின்று தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளும்
 • உணவு உட்கொள்ளும்
 

சுண்ணாம்புக் கரைசல் தயார் செய்து பயன்படுத்தும் முறை

பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ சுண்ணாம்புக் கல்லை  இட்டு கலக்கி விடவும். தெளிந்த சுண்ணாம்பு நீரை ஒரு டம்ளர் அதவாது 50 மிலி காலை மற்றும் மாலையில் 1 லிட்டர் வீதம் கன்று ஈனுவதற்கு முன் 10 தினங்களுக்கும் கன்று ஈன்ற பின் பத்து தினங்களுக்கும் கொடுத்து வரவும். இரவில் இரண்டு லிட்டர் நீரை ஊற்றவும் இவ்வாறு ஒருவாரம் பயன்படுத்திய பின் தேவையெனில் மீண்டும் 10 லிட்டர் நீரில் ஒரு கிலோ சுண்ணாம்புக் கல்லை இட்டு சுண்ணாம்புக் கரைசல் தயார் செய்யவும்.

 

பாரம்பரிய முறையில் பால் காய்ச்சல் வராமல் பாதுகாக்க அகத்திக் கீரை வழங்குதல்

பால் காய்ச்சல் வராமல் தடுக்க கால்நடைகளுக்கு குறிப்பாக கறவை பசுக்களுக்கு தினந்தோறும் கைப்பிடியளவு அகத்திக் கீரை வழங்கி வந்தால்  பால் மாட்டிற்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.

 

தொகுப்புரை

பால்மாடு வளர்ப்போர்  எளிய முறையில் கால்சியம் சத்து கிடைக்க வாய்க்கால் ஓரத்திலும் வீட்டின் கழிவு நீர் செல்லும் இடங்களில் அகத்திமரம் வளர்ப்பதன் மூலம் குறைந்த செலவில் தேவையான கால்சியம் சத்து கிடைக்க வகை செய்யலாம். மேலும் பால் காய்ச்சல் தீவிரமாக இருந்தால் உடனடியாக தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும்.