வாழ்நாள் கல்வி

தானியப்யிர்கள்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்

தானியப்யிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இப்படைப்புழுவின் தாக்குதல் 2015ஆம் ஆண்டு வரை கனடாவின் தென் பகுதி, அர்;ஜென்டீனா நாடுகளில் மட்டுமே காணப்பட்டது. பின்னர், நைஜீரியாவில் 2016இல் கண்டறியப்பட்டது. தற்போது மக்காச்சோளம் பயிரிடப்படும் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தப் படைப்புழு மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் முதன்முதலாக கர்நாடக மாநிலத்தில் சிவமோகா பகுதியில் இதன் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது. 'படைப்புழு' என்ற சொல்லானது பல இனங்களைக் குறிப்பதாக இருக்கலாம். படைப்புழுவானது ஒரு தீங்குயிர் ஆகும். இது பலவகையான பயிர்களைத் தாக்கி, பெருமளவிலான பொருளாதார சேதத்தை வேளாண் மக்களுக்கு ஏற்படுத்தக்கூடியது. இதன் அறிவியல் பெயரானது ஃப்ரூஜ்பெர்டாடா (Frugiperda) என்ற இலத்தீன் சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருள் இலத்தீன் மொழியில் இழந்த பழம் என்பது ஆகும்.

 

 

படைப்புழுவின் வாழ்க்கை பருவம்

படைப் புழுவானது ஆறு புழு நிலைகளைக் கொண்டது. இளம் புழுப் பருவம் கருப்புத் தலையுடன் பச்சை நிறத்தில் காணப்படும். ஆறாம் நிலையிலுள்ள புழுவின் தலைப் பகுதியில் வெண்ணிறக் கோடுகளும், வளர்ச்சியடைந்த புழுவின் தலைப்பகுதியில் ஆங்கில 'ஒய்' எழுத்துபோன்று தலைகீழ் வடிவிலும், உடம்பின் கடைசிப் பகுதியில் 4 புள்ளிகளும் காணப்படும். அந்துப்பூச்சியின் இறக்கைகள் பழுப்பு நிறத்திலும், அவற்றின் நுனி, மத்தியப் பகுதிகளில் வெண்ணிறத் திட்டுகளும் காணப்படும்.புழுவின் இறுதிப் பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிறப் புள்ளிகளும் தென்படும். இவற்றை பார்த்து விவசாயிகள், இப் புழுவை எளிதில் கண்டறியலாம். 


இந்தப் புழுக்களின் வாழ்நாள் முப்பது நாட்கள்தாம். இது, தாய் அந்துப்பூச்சியாக மாறும் போது, 500 முதல் 2,000 முட்டைகள்வரை பயிரின் இலைகளில் இட்டு, அவற்றை வெள்ளை இழைகளால் மூடிவிடுகின்றன. ஓரிரு நாட்களில் முட்டைகளில் இருந்து பச்சை நிற இளம்புழுக்கள் வெளிவந்து, இலைகளில் உள்ள பச்சையத்தை உண்ணும். அதன்பின்னர் அப்புழுக்கள் 14-20 நாட்களில் முதிர்ச்சியடைந்து, மண்ணுக்குள் சென்று கூட்டுப்புழுக்களாக மாறிவிடும். 
அவை 8, 9 நாட்களில் தாய் அந்துப்புழுக்களாக மாறி 10, 15 நாட்கள் வரை முட்டையிடும். இந்த அந்துப்பூச்சி, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்  வரை பறக்கும் ஆற்றல் வாய்ந்தது. 

 

 

படைப்புழு தாக்கக் கூடிய பயிர்கள்

படைப்புழுவானது மக்காச் சோளம், சோளம் மற்றும் நெல், கரும்பு, பருத்தி, சிறு தானியங்கள்,; நிலக்கடலை, புகையிலை மற்றும் கோதுமையிலும் இதன் தாக்குதல் பரவலாகக் காணப்படும். காய்கறிப் பயிர்களை அதிகம் விரும்பாவிட்டாலும், அதிலும் இப்புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தும். பூ வகைப் பயிர்களையும், பப்பாளி, திராட்சை போன்ற பழப் பயிர்களையும் தாக்கவல்லது. 100-க்கும் அதிகமான பயிர்களைத் தாக்குகிறது.

 

 

தாக்குதலின்; அறிகுறி

பயிர் சாகுபடி செய்த 15ஆம் நாளில் இப்புழு தோன்றி குருத்துப் பகுதியை உண்ணத் தொடங்கும். இலைகளில் சிறிய, பெரிய வட்ட வடிவத் துளைகள் இந்தப்புழுத் தாக்குதலின் விளைவால் தோன்றும். இவை வடிவற்ற துளைகளாகவும் இருக்கும். சில செடிகளில் இலைகளின் மேல்பாகம் முற்றிலும் உண்ணப்பட்ட நிலையில் காணப்படும். இதனால் இலைகள் மடிந்த நிலையில் காணப்படும். இந்தப் புழுக்கள் செடியின் தண்டுப் பகுதியைத் துளைப்பதில்லை. பயிர்களில் கதிர்களின் நுனியில் உள்ள காம்புப் பகுதியையே பெரும்பாலும் உண்கின்றன.


புழுக்கள் வெயில் அதிகமாக இருக்கும் போது இலையின் அடிப் பகுதியில் சென்று மறைந்து கொண்டு பாதிப்பை உண்டாக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டி சேதாரத்தை உண்டாக்கும். இளம் புழுக்கள் நூலிழைகளை உருவாக்கி அதன் மூலம் காற்றின் திசையில் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்குச் செல்லும். இளம் செடிகளில் இளம் உறைகளையும், முதிர்ந்த செடியில் கதிரின் நூலிழைகளையும் அதிகம் சேதப்படுத்தும்.  இப்புழுக்கள் குருத்தை முழுமையாக வெட்டி, உட்புறத்திலும்; சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் அதிகமாக சேதத்தை விளைவிக்கும்.


வளர்ச்சியடைந்த புழு, விரியாமலிருக்கும் நடுக்குருத்தைக் கடித்துத் தின்பதால் இலைகள் விரியும்போது இலைகளில் வரிசையாக துளைகள் காணப்படும். கதிர் உருவான பின்னர் புழுக்களானது கதிரின் இலையுறை, கதிரை சேதப்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட கதிரின் உள்ளே புழுவும், அதன் எச்சமும் இருப்பதைக் காணலாம்.

 

 

ஊடுபயிர் சாகுபடி

நேப்பியர் புல்லை வயலைச் சுற்றிலும் வரப்புப் பயிராகப் பயிரிடலாம். மக்காச் சோளத்தில் வேலி மசாலை ஊடுபயிராகப் பயிரிடலாம். இதிலிருந்து வெளிவரும் திரவம் படைப் புழுவுக்கு உகந்ததல்ல. மக்காச்சோளத்துடன் மரவள்ளி அல்லது பீன்ஸ் போன்ற படைப் புழுவால் அதிகம் விரும்பப்படாத பயிர்களை ஊடுபயிராகப் பயிர் செய்யலாம்.

 
மேலும் உளுந்து, தட்டப்பயறு 10 வரிசைக்கு ஒரு வரிசை நடவு செய்யலாம். வரப்புப் பயிராகவும் தட்டைபயறு, எள் மற்றும் சூரியகாந்தி முதலிய பயிர்களையும், ஊடுபயிராக பாசிப்பயறு முதலிய பயிர்களையும் பயிரிடுவதால் மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதலை தவிர்க்கலாம். வயலைச் சுற்றியும் பயறு வகை மரப் பயிர்கள் அல்லது ஆண்டு முழுவதும் பூக்கும் தாவரங்களைத் தடுப்புப் பயிராக விதைக்கலாம். இவை படைப் புழுவின் எதிரிகளை ஊக்குவிக்கும்.

 

 

படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறை

 • ஒரே வயலில் மக்காச்சோளத்தைத் தொடர்ந்து பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
 •  காலம் தாழ்த்தி பயிர் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
 • கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். 
 • கடைசி உழவில் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட்டு உழ வேண்டும்.
 • விதை நேர்த்தியின் செய்து விதைப்பதால் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும்   பாதிப்பைத்     தவிர்க்க இயலும். 
 • ஒரு ஏக்கருக்கு பத்து பறவை குந்து கோல் அமைத்து, அந்து பூச்சிகளை   இயற்கையாக    கட்டுப்படுத்தலாம். 
 • முடிந்தவரை பூச்சியின் முட்டைக் குவியல், புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். 
 • மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விளைநிலத்தில், ஒரு ஏக்கருக்கு ஐந்து இடத்தில், இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து, அந்துப் பூச்சிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.  
 • முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா, டிலினோமஸ் மற்றும் புழு ஒட்டுண்ணிகளான  செலோனிஸ், கொடிசியா போன்றவையும்  வைத்து    இப் புழுவின் பாதிப்பைக் குறைக்கலாம்.
 • புள்ளி வண்டுகள், தரை வண்டுகள் மற்றும் பூச்சிகள் வயலில் விட்டால்  படைப் புழுவை        உண்ணும். 
 • நுண்ணுயிர் பூச்சிகொல்லிகளான பிவேரியா பேசியான> மெட்டாரைசியம் 
 • அனைசோபிலியே மற்றும் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம் படைப் புழுவின் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்.
 • வேப்பங்கொட்டை சாறு ஐந்து சதவீதம் அல்லது அசாடிராக்டின் மூன்று சதவீதம் தெளிக்கலாம் 
 • மெட்டாரைசியம் பூஞ்சாண மருந்து  ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ தெளிப்பதன் மூலம் படைப்புழுக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
 • படைப்புழுவின் பாதிப்பு அதிகமாகும் போது பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்   2 மில்லி ஒரு லிட்டர் (தண்ணீர்), ஸ்பைனோசேட் 0.5 மில்லி ஒரு லிட்டர் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம் 
 • இன்டாக்ஸாகார்ப் 1 மில்லி / ஒரு லிட்டர், ஏமமெக்டின் பென்சோயேட் 0.1கிராம் / ஒரு லிட்டர் தண்ணீர்  ஆகிய பூச்சிகொல்லி மருந்துகளில் ஏதேனும்  ஒன்றைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
 

மருந்து தெளிக்கும் முறை

மருந்து தெளிப்பது  அதிகாலை நேரம்  அல்லது  மாலை நேரத்தில் தெளிப்பது நல்லது

மருந்துக் கரைசல் இலைச்சுருள்களுக்குள் நன்கு பரவிப்படிய திரவ சோப்புகளில் ஒன்றை (சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால்) ஒட்டுபசை  சேர்த்து தெளிக்க வேண்டும்.
 
ஒவ்வொரு தடவையும் தனித்தனியாக தெளிப்பானுக்கு ஏற்றபடி ஒரு பிளாஸ்டிக் வாளியில் மருந்துக் கரைசலை நன்கு கலக்கிய பின்னரே தெளிப்பானின் கொள்கலத்தில் ஊற்றித் தெளிக்க வேண்டும்.
 
சாதாரண சோப்புகளான காதி பார் சோப், சலவை சோப்புகள், ஷாம்புகள் ஆகியவற்றை மருந்துக் கரைசலுடன் சேர்க்கக்கூடாது. ஏனெனில் அவற்றில் உள்ள காரத்தன்மை பூச்சிமருந்தின் விஷத்தன்மையை முறித்துவிடும்.

 

 

முடிவுரை

படைப்புழுவின் தாக்குதலை குறைக்க விவசாயிகள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி; அவற்றை கட்டுப்படுத்தி, நல்ல மகசூல் பெறலாம். அதுமட்டும் அல்லாமல் வரும் காரீப் மற்றும் ராபி பருவத்தில், மக்காச்சோளபயிரில்; படைப்புழு தாக்குதல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்,