வாழ்நாள் கல்வி

தென்னை நடவு மற்றும் மேலாண்மை

தென்னை நடவு மற்றும் மேலாண்மை

தென்னை நடவு மற்றும் மேலாண்மை

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

சங்க காலத்தில் தென்னை மரம் நெய்தல் மற்றும் மருதநில ஆற்றங்கறையோற பகுதிகளில் அதிகம் வளரக்கூடியதாக குறிப்பிட்டிருந்தாலும், தற்போது அனைத்து வகையான நிலத்திலும் தென்னை நன்கு வளரக்கூடியதாக இருக்கிறது. தென்னை மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக இருப்பதால் இதனை விவசாயிகள் பணம் காய்க்கும் மரமாக பார்க்கிறார்கள். தண்ணீர் வசதி இருந்தால் தென்னை சாகுபடி செய்து அதிக இலாபம் அடையலாம்

 

தென்னை ரகங்கள்

தென்னையில் குட்டை ரகம், நெட்டை ரகம், ஒட்டு ரகம் மற்றும் செவ்விளநீர் இரகங்கள் இருக்கிறது. குட்டை ரகம் சுமார் 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நான்கு ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி 25 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். தென்னை நெட்டை ரகம் சுமார் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. 5 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி 60 -75 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.  தென்னையில் ஒட்டு வகை சுமார் 10 - 14 மீ;ட்டர் உயரம் வளரக் கூடியது. 4 ஆண்டுகளில் பலனுக்கு வந்து 40 ஆண்டுகள் வரை காய்க்கக் கூடியது.

 

தென்னங்கன்று தேர்வு முறை

தென்னங்கன்றுகள் தேர்வு செய்யும் போது வயது முதிர்ந்த கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். அதாவது இலைகள் பச்சையாக, குறைந்தது 6 இலைகள் உடைய கன்றுகளை தேர்வு செய்து நடவேண்டும். கன்றுகளில் அழுகள், வாடல், நோய் தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். பூச்சி தாக்கமும் இல்லாமல் இருக்க வேண்டும். நடவு செய்கூடிய பகுதிக்கு ஏற்ற கன்றாகவும், தட்பவெப்ப நிலையை தாக்கி வளரக்கூடியதாக இருக்கவேண்டும். 

 

நிலம் தயாரித்தல்

வடிகால் வசதியுடைய மணல் கலந்த வண்டல் மண், மணற்பாங்கான பகுதிகள், கரிசல்மண் பகுதிகள் ஆகியவை தென்னை நடவு செய்ய ஏற்ற நிலம். நிலத்தை நன்கு உழுது சமப்படுத்தி நடவு செய்யும் ரகத்திற்கேற்றவாறு இடைவெளி விட்டு 90 செ.மீ அகலம், 90 செ.மீ நீளம் மற்றும் 90 செ.மீ ஆழம் உள்ள குழிகள் வெட்டி  தென்னங்கன்றுகளை நடவு செய்யலாம்.

 

தென்னை பயிரிடும் பருவம்

தென்மேற்கு அல்லது வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் தென்னங்கன்றுகளை நட வேண்டும். கோடை காலத்தில் நடவு செய்யக்கூடாது. ஜீன் - ஜீலை டிசம்பர் - ஜனவரி மாதங்களில் தென்னங் கன்று நடுவது ஏற்றது.

 

தென்னை நடுவதற்குரிய இடைவெளி

நெட்டை மற்றும் ஓட்டு வகை : 7.5 மீட்டர், குட்டை வகை மரங்களுக்கு 5.4 மீ;ட்டரும், வரப்புகளில் வரிசையாக நட வெய்தால் 6.5 மீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

 

தென்னங்கன்று நடும் முறை

3 அடி அகலம், 3 அடி நீளம் மற்றும் 3 அடி ஆழம் உள்ள குழி எடுத்து, அதில் லின்டேன் 10 சத தூளை தூவி எறும்புகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க வேண்டும். கன்று நடுவதற்கு முன் குழியில் ஓரு அடி ஆழத்திற்கு நன்கு மக்கிய தொழு உரம், சிறிதளவு உரித்த தென்னை நார் கழிவு, உயிர் இடுபொருட்கள், செம்மண் மற்றும் மணல் ஆகியவற்றை சமபங்கு கலந்து நிரப்ப வேண்டும். தென்னங்கன்று நடும்போது, அதன் வேர்களை வெட்டிவிட வேண்டும். பின் குழியின் நடுவில் இருக்குமாறு வைத்து குழியிலிருந்து ஏற்கனவே எடுத்த மண்ணை கொண்டே இறுக்கமாக கன்றைச் சுற்றி மூடிவிவேண்டும். கன்றுகளை சூரிய ஓளியில் இருந்து பாதுகாக்க அதன் பக்கவாட்டில் தென்னை ஓலை அல்லது பனை ஓலையை சாய்வாக வெய்யில் படாதவாறு நடவும்.

 

தென்னையில் நீர் நிர்வாகம்

கன்று நட்ட ஓரு வருடத்திற்கு ஓரு நாள் விட்டு ஓரு நாளும், இரண்டாம் வருடத்திலிருந்து காய் காய்க்கும் வரை இரண்டு வாரத்திற்கு ஓரு முறையும், பின்னர் 10 நாட்களுக்கு ஓரு முறையும் தண்ணீர்ப் பாய்ச்சுதல் அவசியம். கோடை மற்றும் மழையற்ற காலங்களில் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர்ப் பாய்ச்சவும்;. தண்ணீர் வசதியுள்ள தென்னை விவசாயிகள் தென்னை மரத்தை சுற்றி  நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் தென்னை மரத்திலிருந்து 5 அடி தூரத்தில் மரத்தை சுற்றி வாய்க்கால் அமைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு நீர் பாய்ச்சுவதனால் தென்னை மரத்திற்கு தேவையான சத்துக்களை வேர்கள் கிடைக்க செய்யும். 

 

சொட்டு நீர்ப் பாசனம்

சொட்டு நீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதென்றால் மரம் காய்ப்புக்கு வந்த பின் ஓரு நாளைக்கு ஓரு மரத்திற்கு 100 லிட்டர் தண்ணீர் வீதம் அளிக்க வேண்டும்.

 

மூடாக்கு அமைத்தல்

தென்னந்தோப்பில் கிடைக்க கூடிய மட்டைகள் மற்றும் உரிமட்டைகளை மரத்தை சுற்றி அடுக்கி வைப்பதால் நீர் விரைவாக ஆவியாதல் தவிர்க்கப்படுகிறது. மேலும் உரிமட்டையில் 0.23 சதம் தழைச்சத்தும், 0.04 சதம் மணிசத்தும், 0.78 சதம் சாம்பல் சத்தும,; 0.8 சதம் சுண்ணாம்பு சத்தும் மற்றும் 0.05 சதம் மெக்னீசியம் சத்தும் இருக்கிறது. இந்த உரிமட்டைகளை மரத்தை சுற்றி அடுக்கி வைத்து மக்கவைத்து பயன்படுத்துவதால் தென்னையில் மகசூல் கணிசமா அதிகரிக்கும்.  மேலும் உரிமட்டைகள் அதன் எடையை போல 8 மடங்கு தண்ணீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதனால் மண்ணீன் ஈரம் பாதுகாக்கப்படுகிறது.

 

 

உரம் இடுதல்

ஐந்து வருட தென்னைமரத்திற்கு மரத்தைச் சுற்றி 18 மீட்டர் அரைவட்ட குழி அமைத்து அதில் 50 கிலோ கம்போஸ்ட் அல்லது மக்கிய தொழுஉரம், அல்லது பசுந்தாள் உரம் இடவேண்டும். இந்த உரத்துடன் 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 2 கிலோ மியூரியேட் ஆப் பொட்டஷ் ஆகிய உரங்களையும் சேர்த்து மண்ணுடன் கலந்து குழியில் இட்டு மூடி பின்பு நர்ப் பாய்ச்ச வேண்டும். மேற்கூறிய உரங்களை வருடத்திற்கு முதல் முறையாக ஜீன் - ஜீலை மற்றும் இரண்டாம் முறையாக டிசம்பர் - ஜனவரி மாதங்களிலும் இடவேண்டும். 2, 3 மற்றும் 4 வயதுடைய மரங்களுக்கு தழை, மணி, மற்றும் சாம்பல் கலந்த  உரத்தை முறையே ¼ , ½ , ¾ என்ற அளவில் வருடம் இரண்டு முறை இடவேண்டும்.

 

தென்னையில் இடை உழவு

வருடத்திற்கு இரு முறை ஜீன் - ஜீலை மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் மரங்களுக்கு இடையே உழுவது அவசியம். இப்படி உழுவதால் களைகள் கட்டுப்படுது;தப்படுகின்றன. கொடுக்கப்பட்ட சத்துக்கள் எளிதில் மரங்களுக்கு கிடைக்கிறது. வேர்களுக்கு நல்ல காற்றோட்டம் கிடைப்பதுடன், புதிய வேர்களின் வளர்ச்சியும் துரிதப்படுத்தப்படுகின்றன. மற்றும் மழைநீர்; புரண்டு ஓடாமல் நிலத்தில் சேருவதால், தென்னை விளைச்சல் அதிகமாகிறது.

 

தென்னையில் ஊடுபயிர்

முதல் ஜந்து வருடங்களுக்கு நிலக்கடலை, சூரியகாந்தி, எள், மஞ்சள் மற்றும் மரவள்ளி போன்றவற்றை ஊடு பயிர்களாக பயிர் செய்யலாம். நன்கு வளர்ந்த மர நிழல்களில் கொக்கோ, அன்னாசி, வாழை, மிளகு கால்நடை தீவனப்பயிர்கள் மற்றும் முலிகை பயிர்கள் சிலவற்றையும் (அவுரி, சிறுகுறிஞ்சான், சிறியா நங்கை மற்றும் பல) சாகுபடி செய்யலாம்.

 

தென்னையில் தழைச்சத்து பற்றாக்குறை

இதன் பற்றாக்குறையால் கன்றுகளின் வளர்ச்சி குறைந்து இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். காய்கள் காய்ப்பது குறைந்து, காய்கள் முதிர்ச்சியடையும் காலம் அதிகம் ஆகும். முதிர்ந்த காய்கள் வறண்டு நீர்ச்சத்து குறைந்து காணப்படும். இவ்வாறு நிகழாமல் தடுக்க 25 கிலோ தொழு உரத்துடன் 3ஃ4 கிலோ யூரியா சேர்த்து மரத்தூரில் இருந்து 3 அடி தள்ளி ஜீன் மாதம் ஒரு முறையும் இரண்டாவதாக டிசம்பர் மாதம் மறு முறையும் இட வேண்டும்.

 

தென்னையில் சாம்பல் சத்து குறைபாடு

மரத்தின் அடி இலைகள் மஞ்சள் நிறமாகி பின்னர் பழுப்பு நிறமாக மாறி கீழ் நோக்கி தொங்கும்.  நாளடைவில் முதிர்ச்சி அடையும் முன்னரே உதிர்ந்து விடும். தேங்காயின் அளவு சிறுத்து எண்ணக்கையுடன் குறைந்து காணப்படும்.  இதற்கு 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை மரத்தில் இருந்து 5 அடி தள்ளி ஜீன் மாதம் ஒரு முறையும், டிசம்பர் இரண்டாம் முறையும் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

 

 

தென்னையில் நுண்ணூட்ட பற்றாக்குறை

தென்னையில் சில அறிகுறிகளை வைத்து நுண்ணூட்ட பற்றாகுறை உள்ளது என்று அறிந்து கொள்ளமுடியும். அதாவது  மெக்னீசியப் பற்றாக்குறை இருந்தால் இலையின் நுனி மஞ்சள் நிறமாகவும் அடிப்பகுதி பச்சையாகவும் இருக்கும். போரான் குறைபாடு இருக்கும் போது இளம் கன்றுகளில் இலை பிரியாமல், வளரும் குருத்தின் இலைகள் வளராமலும,; பிரியாமல் காணப்படும். மேலும் பிஞ்சுகள் காய்ந்து, குரும்புகள் உதிரும.. வெற்றுத் தேங்காய் அதிகமாகவும், காய்கள் நீளமாகவும் எடை குறைந்தும் காணப்படும். முக்கியமாக காய்களில் வெடிப்புகள் தோன்றும். இதனால் நன்றாக வளர்ந்த தென்னை மரத்திற்கு வருடத்திற்கு ஒரு கிலோ தென்னை நுண்ணூட்டச்சத்து உரத்தினை இடவேண்டும் அல்லது 200 மிலி தென்னை ஊட்டச்சத்து கரைசலை 6 மாதங்களுக்கு ஒரு முறை இளம் வேர்களின் வழியே செலுத்த வேண்டும். இவ்வாறு தென்னைக்கு நுண்ணூட்டச்சத்து கொடுத்து வந்தால் நுண்ணூட்ட பற்றாகுறை வராமல் தவிற்கலாம்.

 

தென்னை மரங்களுக்கு தேவையான தண்ணீர், மற்றும் உரம் கொடுத்து பராமரிப்பு செய்து வந்தால் அதிக விலைச்சலை எடுக்க முடியும். பூச்சிகளின் தாக்கம் தென்பட்டால் உடனுக்கு உடன் கட்டுப்படுத்தி மரத்தை பாதுகாக்க வேண்டும்.