வாழ்நாள் கல்வி

கத்தரியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


கத்தரி செடியை தாக்கும் பூச்சிகளும், நோய்களும்

கத்தரி செடியை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் 


கத்தரி சாகுபடியில் நோய் மற்றும் பூச்சிகளின் தாக்கம் அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக சாறு உறிஞ்சும் பூச்சிகள், குருத்து புழு, காய்ப்புழு மற்றும் சாம்பல் நிற மூக்கு வண்டு ஆகிய பூச்சிகள் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. அதேபோன்று நோய்களில் நாற்றழுகல், சிற்றிலை, காய் அழுகல், இலைப்புள்ளி நோய், ஆகிய நோய்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அதனால் கத்தரி சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை மிகவும் முக்கியமான ஒன்று.



வெள்ளை ஈயால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

வெள்ளை ஈயால் ஏற்;படக்கூடிய பாதிப்புகள்  (Impact of whitefly in Brinjal)


கத்தரி வயலுக்குள் நுழைந்தால் கிளைகள் அசைவில் சிறிய வெள்ளை நிற பூச்சிகள் பறக்கும்.  இவையே இலையின் சாற்றை உறிஞ்சும் வெள்ளை ஈக்கள். இப்பூச்சிகளினால் செடியை வளர்ச்சி பாதிக்கப்படும். குறிப்பாக நுனி இலைகள் சுருண்டு விடும். மேலும் அவை இலை சுருள் வைரஸ் நோயை மற்ற செடிகளுக்கும் பரப்புகிறது. அதனால் வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவது அவசியம். 



வெள்ளை ஈக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறைகள்

வெள்ளை ஈக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறைகள் (whitefly control through Organic methods)

கோடைகாலத்தில் கத்தரி வயலில் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறியை ஹெக்டெருக்கு 15 என்ற எண்ணிக்கையில் வயலில் ஆங்காங்கே கட்டிவைத்து கட்டுப்படுத்தலாம். அதாவது செடியின் உயரத்திற்கு மேல் 1 அடி உயரத்தில் கட்டிவைத்து கட்டுப்படுத்தலாம் அல்லது 1 லிட்டர் தண்ணீர்க்கு 3 மில்லி வேப்பம் எண்ணெ கலந்து அதனுடன் 1 மிலி டீபால் ஒட்டு பசையும் கலந்து கத்தரி வயலில் தெளித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். 

 



சாறு உறிஞ்சும் பூச்சிகளை இராசயன முறையில் அழிக்கும் முறைகள்

சாறு உறிஞ்சும் பூச்சிகளை இராசயன முறையில் அழிக்கும் முறைகள் (Sucking pest control methods) 


கத்தரி வயலில் சிறிய சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, தத்துபூச்சி, அசுவினி,  போன்ற பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சும். இந்த சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த  1 லிட்டர் தண்ணீருக்கு  1 மில்லி இமிடாகுளோபிரிட், 4 மில்லி நிம்பிசிடின் சேர்த்து மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம். 



உண்ணிப் பூச்சி தாக்குதல்

உண்ணிப் பூச்சி தாக்குதல் 


கத்திரி செடியின் இலைகளின் அடிப்பாகத்தில் உண்ணிப் பூச்சிகள் கூட்டமாக சாற்றை உறிஞ்சுவதால் இலையின் மேற்புறத்தில் வெள்ளை நிற புள்ளிகளைக் காணலாம். நாளடைவில் பச்சை நிறம் குறைந்து மஞ்சளாகி இலைகள் உதிரும். இதனைக் கட்டுப்படுத்த 5 சத வேப்பங்கொட்டை சாற்றினை தெளிக்கலாம். அல்லது டைக்கோபால் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி என்ற வீதத்தில் கலந்து தெளித்து கத்திரி செடியில் உண்ணிப் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 



கத்தரியில் நாற்றில் அழுகல் நோயினை எவ்வாறு கட்டுப்படுததுவது

கத்தரியில் நாற்றில் அழுகல் நோயினை எவ்வாறு கட்டுப்படுததுவது

 
கத்தரி நாற்றங்காலில் வடிகால் வசதியுடன் மேட்டுப்பாத்தி அமைத்து நாற்றுக்கள் நெருக்கம் இல்லாமல் வளருமாறு விதைக்க வேண்டும். விதைக்கும் முன்னர் 4 கிராம் கேப்டான் மருந்தை கலந்து 24 மணிநேரம் கழித்து விதைகளை விதைக்க வேண்டும். நாற்றாங்காலில் நோயின் அறிகுறி காணப்பட்டால் 1 சதவிகித போர்டோ கலவை அல்லது 2.5 கிராம் தாமிர ஆக்ஸி குளோரைடு மருந்தினை ஒரு லிட்டர் நீரில் கலந்து நாற்றுக்களின் வேர் மற்றும் தண்டு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

 



கத்தரி செடியில் சிற்றிலை நோயினை கட்டுப்படுத்தும் முறைகள்

கத்தரி செடியில் சிற்றிலை நோயினை கட்டுப்படுத்தும் முறைகள் 


கத்தரி செடியில் சிற்றிலை நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் சிறுத்து சிறிதாக இருக்கும். இந்நோய் முதிர்ந்த செடிகளையே அதிகம் தாக்கும். இந்த நோயை தத்துப்பூச்சி மற்றும் வெள்ளை ஈக்கள் பரப்புகின்றது. அதனால் இந்த நோயினை பரப்புகின்ற பூச்சிகளை கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அபாமேக்டின் அல்லது  1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் ஸ்பிரைடு என்ற மருந்துகளை தெளித்து கத்தரி செடியில் சிற்றிலை நோய்களை பரப்புகின்ற பூச்சிகளை கட்டுப்படுத்தலம். 



கத்தரி செடியில் வேர் அழுகல் நோயினை கட்டுப்படுத்தும் முறைகள்

கத்தரி செடியில் வேர் அழுகல் நோயினை கட்டுப்படுத்தும் முறைகள் 


மழைகாலத்தில் கத்தரி செடியில் வேர் அழுகல் நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்;. இந்த வேர் அழுகல் நோய் வராமல் இருக்க கத்தரி செடிகள் நடவு செய்து 10 நாட்களுக்கு பிறகு 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 50 கிலோ மக்கிய எருவுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது மண்ணிலிட வேண்டும் அல்லது 1 லிட்டர் தண்ணீர் 2 கிராம் கார்பன்டீசம் என்ற வீதத்தில் கலந்து வேர் நனையுமாறு ஊற்ற வேண்டும். இதன் மூலமாக வேர் அழுகல் நோயினை கட்டுப்படுத்தலாம்.



காய் அழுகல் நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறை

காய் அழுகல் நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் 


கத்தரியில் செடியில் காய் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்ட காய்கள் அழுகி கருமை நிறத்தில் இருக்கும். இதனால் கத்தரி வயலில் ஆங்காங்கே அழுகிய காய்கள் தென்படும். இந்நோயினை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் கேப்டான் அல்லது 2 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது 2 கிராம் ஜினப் இதில் ஏதாவது ஒன்றை தெளித்து கத்தரியில் காய் அழுகல் நோயினை கட்டுப்படுத்தலாம்.



சாம்பல் நோயின் அறிகுறி மற்றும் நோயினை கட்டுப்படுத்தும் முறை

சாம்பல் நோயின் அறிகுறி மற்றும் நோயினை கட்டுப்படுத்தும் முறை 


சாம்பல் நோய் தாக்கிய கத்தரி செடிகளின் இலையில் சாம்பல் நிற பூஞ்சாணம் தென்படும். சாம்பல் நோயினை கட்டுப்படுத்தும் நனையும் கந்தகத்தை ஓரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்திலும் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். 



இலைப்புள்ளி நோயின் அறிகுறி மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறை

இலைப்புள்ளி நோயின் அறிகுறி மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறை 


இலைப்புள்ளி நோய் தாக்கிய கத்தரி செடிகளின் இலைகளின் மேல் வட்ட வடிவிலான சிறிய புள்ளிகள் தென்படும். இதனால் செடிகள் வளர்ச்சியின்றி இருக்கும். காய்கள் காய்ப்பதும் தடைபடும். இன்நோயினை கட்டுப்படுத்த ஓரு லிட்டர் தண்ணீர், 2 கிராம் மேங்கோசெப் மருந்து என்ற விகிதத்திலும் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.