வாழ்நாள் கல்வி

பயறுவகை பயிர்கள்

உளுந்து சாகுபடி தொழில் நுட்பங்கள்

பயறுவகை பயிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பயறு வகைப் பயர்களில் உளுந்து முதன்மை பயிராக விளங்குகிறது உலகில் உளுந்தினை அதிகளவு உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலக உற்பத்தியில் 70 சதம் விழுக்காடு உளுந்து இந்தியாவில் உற்பத்தியாகிறது. உளுந்தின் தாயகமும் இந்தியாவாகும். உளுந்தானது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலங்களில் வளரும் குற்றுச்செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது .உளுந்துச் செடியானது 30 முதல் 100 செமீ வரை வளரும் இயல்பினைக் கொண்டுள்ளது. இச்செடியிலிருந்து அடர் மஞ்சள் நிறத்தில் பூக்கள் தோன்றுகின்றன. இப்பூக்களிலிருந்து இருபுறமும் வெடிக்கக் கூடிய காய்கள் தோன்றுகின்றன. காய்கள் உருளை வடிவத்தில் 4 முதல் 6 செமீ வரை நீளத்தில் இருக்கின்றன. இக்காய்களில் 4 முதல் 10 வரை உருண்ட கருப்பு அல்லது அடர் சாம்பல் நிற விதைகள் காணப்படுகின்றன. இந்த விதைகளே நாம் பயன்படுத்தும் உளுந்து ஆகும்.

 

ரகம்

டி.எம் வி 1, டி 9, கோ 5, வம்பன் 1, வம்பன் 2    

 

பட்டம்

ஆடி,  மாசி   

 

விதையளவு

ஒரு ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து தேவைப்படும் 

 

விதைநேர்த்தி

உயிர்உர விதை நேர்த்தியாக ஒரு கிலோ விதைக்கு ரைசோபியம்.  10 கிராம்;;, பாஸ்போ பாக்டீரியா 10 கிராம் இவற்றை ஆறிய அரிசி வழகஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். 
   
ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். 

இல்லையெனில் கார்பென்டாசிம் (அ) திரம் 2 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்கவும். 

குறிப்பு : ரைசோபியம் பாக்டீரியாக்களை பூசண மருந்து கலந்த விதையுடன் கலக்கக் கூடாது. டிரைக்கோடர்மா கலந்த விதையுடன் பாக்டீரியாக்களைக் கலந்து விதைக்கலாம்.

 

 

நிலம் தயாரித்தல்

நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மண் நன்றாக கட்டிகள் இல்லாதவாறு 3-4 உழவுகள் போட வேண்டும்.

 

அடியுரம்

ஒரு டன் ஊட்டமேற்றிய தொழுவுரம் போட வேண்டும் இத்துடன் 30 கிலோ டி.ஏ.பி. உழவு சால் மூலம் ஒரு ஏக்கருக்கு போட வேண்டும். 

 

உயிர் உரம்

ரைசோபியம் 2 கிலோ,பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ, மக்கிய தொழுவுரம் 50 கிலோ உடன் கலந்து வயலில்  ஈரம் இருக்கும் பொழுது போடவேண்டும்    

 

நுண்ணுரம்

ஒரு ஏக்கருக்கு பயறுவகை நுண்ணுரம் 2 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து விதை நடவு செய்த 15 நாட்களுக்குள் வயலில் ஈரம் இருக்கும் பொழுது தூவிவட வேண்டும்

 

பயிர் இடைவெளி

30 X 10 செ.மீ. ( 33 செடிகள் / சதுர மீட்டர்)

 

நீர் நிர்வாகம்

நடவு செய்த 15ம் நாள் ஒரு முறையும், 30ம் நாள் ஒரு முறையும் களை எடுக்க வேண்டும். பயறு சாகுபடியில் சரியான தருணத்தில் களை எடுக்காமலிருந்தால் பயிர் வளர்ச்சி  பாதிக்கப்பட்டு மகசூல் குறையும்.  

 

களை நிர்வாகம்

விதை முளைக்கும் போதும்பூ பூக்கும் பருவம் காய் வளர்ச்சி பருவம் ஆகிய முக்கிய வளர்ச்சி பருவங்களில் நீர் பாய்ச்ச வேண்டும்.
    
அதிக மகசூல் பெறுவதற்கு 2 சதவீதம் டிஏபி கரைசலான, அதாவது 5 கிலோ டிஏபி கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி தெளிந்த கரைசலை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் கைதெளிப்பானால் தெளித்துவிட வேண்டும்.

மேலும் தெளிக்கும்போது வயலில் போதுமான ஈரப்பதம் இருக்க வேண்டும். இந்த முறையை  பூக்கும் தருணத்தில் ஒரு முறையும். அதன் பிறகு 15 நாட்கள் இடைவெளி விட்டு மறுமுறை தெளிக்க வேண்டும்.

 

அசுவுனி

 அறிகுறி    
இளம் தளிர்கள்,பூக்கள், மொட்டுகள், பிஞ்சுகளில் அடை அடையாக கரும்பச்சை நிறத்தில் காணப்படும். பூக்களும் பிஞ்சுகளும் உதிரும். செடிகளை சுற்றி  எறும்புகளின் நடமாட்டம்  அதிகமாக இருக்கும்.
    
கட்டுப்படுத்தும்  முறை    
அசுவிணி தாக்கப்பட்ட செடிகளை களைத்து அழிக்க வேண்டும்.    இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற அளவில் மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்;    

 

 

பச்சைக் காய்ப்புழு

பச்சைக் காய்ப்புழு தாக்குதலின் அறிகுறி

இதன்  பழுப்பு நிற தாய்ப்பூச்சி சிறிய மஞ்சள் நிற முட்டைகளை இளம்தளிர்கள், பூக்கள், காய்களில்  தனித்தனியாக இடுகின்றன. இவற்றில் இருந்து வெளிவரும் புழுக்கள் தலைபாகத்தை மட்டும் காய்களுக்குள்  செலுத்தி வட்டவடிவ துவாரங்கள் ஏற்படுத்துகின்றன.
    
கட்டுப்படுத்தும் முறை    

  • விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை சேகரித்து அழிக்கலாம்.
  • டிரைக்கேகிரம்மா ஒட்டுண்ணி அட்டை  3சிசி / ஏக்கர்

 

 

நாவாய்ப்பூச்சி

நாவாய்ப்பூச்சி அறிகுறி    
இப்பூச்சிகள் ஒரு வித துர்நாற்றத்தை உண்டாக்கும். காய்களின் சாற்றை உறிஞ்சுவதால் அவை வாடி உதிர்ந்து விடும்.
    
கட்டுப்படுத்தும் முறை
சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற அளவில் மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

 

தண்டு ஈ

தண்டு ஈ அறிகுறி    
கருமை நிற தாய் ஈ தன் முட்டைகளை இளம் தளிர்களில் இடும். வாடும் செடிகளை கவனித்தால் தண்டு பகுதி நசிந்து  துளைக்கப்பட்டு இருக்கும். தண்டின் உள்ளேயே கூட்டுப்புழு காணப்படும்.
    
கட்டுப்படுத்தும் முறை    
தண்டில் உள்ள புழுக்களை சேகரித்து  கொன்று விடுதல்  எண்டோசல்பான்  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி தெளிக்கலாம்.

 

 

மஞ்சள் தேமல் நோய்

மஞ்சள்  இலைத்  தேமல் நோய் தாக்குதலின்அறிகுறி    
இலைகளில் தேமல் போன்று மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும்.  தீவிரமாக தாக்கப்பட்ட  செடிகளில் இலைகள் சிறுத்து பூ மற்றும் காய்கள் பிடிக்காமல் இருக்கும். பிடித்த காய்கள் விதை ஊறாமல் இருக்கும்
    
கட்டுப்படுத்தும் முறை    
நோய் தாக்கிய செடிகளை பிடிங்கி அழிக்கவம். நோய் எதிர்ப்பு ரகங்களை பயிரிடவும். 3 நாள் புளித்த தயிர் 100 மில்லி / 10 லிட்டர் தண்ணீரில் கலந்து  மாலை வேலையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

சாம்பல் நோய்

சாம்பல் நோய் தாக்குதலின் அறிகுறி    

இலைகளின் இருபுறங்களிலும் சிறிய வெண்மை கலந்த சாம்பல் நிறமான புள்ளிகள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை     

நோய் தாக்கிய செடிகளை அகற்றி அழிக்க வேண்டும்.   ஒரு ஏக்கருக்கு 200 கிராம் கார்பன்டிசம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

 

வேரழுகல் நோய்

வேரழுகல் நோயை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் புளோரைசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை, ஏக்கருக்கு 25 கிலோவுடன் 50 கிலோ தொழுவுரம் அல்லது மணலுடன் கலந்து, விதைத்த 30 நாட்கள் கழித்து மண்ணில் இட வேண்டும் அல்லது வேப்ப பிண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும்.

 

அறுவடைத் தொழில் நுட்பம்

முதிர்ந்த காய்களைப் பறித்து உலர்த்த வேண்டும். அறுவடை செய்யும்போது பயிர்களை வேரோடு பிடுங்க வேண்டும். இல்லையெனில் முழு தாவரத்தையும் வெட்டி எடுக்க வேண்டும். பின்னர் குவித்து வைத்து உலர்த்தி பயிர்களை பிரிக்க வேண்டும் இதனால் 60-65 வது நாளில் முதல் அறுவடை முடிந்தவுடன் 20 நாட்களில் மீண்டும் துளிர்த்து 100 வது நாளில் இரண்டாவது அறுவடைக்குத் தயாராகிறது.  

 

சேமித்து வைத்தல்

100 கிலோ விதைக்கு 3 கிலோ அரைத்த வேப்பங்கொட்டைத்தூள்  கலந்து வண்டின் சேதத்தைக் குறைக்கலாம்.காற்று புகாத பையில் சேமித்து வைக்க  வேண்டும்.    

 

முக்கிய குறிப்புகள்

உளுந்து பயிர் நடவு செய்தால் அடுத்த பயிருக்கு மகசூல் கூடும்,அறுவடை செய்யும்பொழுது உளுந்தம் பயிரின் வேர்பகுதியை காட்டிலே விட்டு விடவேண்டும்.

அருகு அதிகம் இருந்தால் கோடை காலத்தில் கடப்பாறை கம்பி கொண்டு அதிகம் உள்ள பகுதியால் இருந்து வேரோடு நீக்க வேண்டும்.பசிலி போன்றவற்றை வேருடன் அகற்றி மிகக் கவனமான நிலத்தினை விட்டு சிறுசிறு துண்டுகளை நிலத்தில் இருந்து உடனுக்குடன் வேருடன் பிடுங்கி அகற்ற வேண்டும்.
    
இலைவழி தாவர உணவு  
 

இலைவழித் தாவர  உணவாக ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் மல்டிகே, பயிர் பூ பூக்க தொடங்கும் பருவத்திலும், பூப் பருவத்திலும் இரண்டு முறை 15 நாள்கள் இடைவெளி விட்டு செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

 

 

முடிவுரை

பயறுவகை பயிர்களான உளுந்து ஒரு உணவுப் பொருளாக அதிகளவிற்கு பயன்படுத்தப்பட்டு வருவதால் இவற்றின் தேவை அதிகரிக்கிறது ஆனால் உற்பத்தி  குறைவாகவே உள்ளது. எனவே இவற்றின் விளைச்சலை அதிகரிக்க வேண்டிய நிலை இருப்பதால் நாம் அவற்றை சாகுபடி செய்து நல்ல வருவாயை பெற முன் வருவோம்.