வாழ்நாள் கல்வி

புடலை சாகுபடி சாகுபடி தொழில்நுட்பம்

புடலை சாகுபடி சாகுபடி தொழில்நுட்பம்

புடலை சாகுபடி சாகுபடி தொழில்நுட்பம்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பந்தல் வகை காய்கறி பயிரில் மிகவும் முக்கியமான பயிர் புடலை. புடலை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. புடலையில் நெட்டை புடலை மற்றும் குட்டை புடலை என இரண்டு ரகங்கள் உள்ளது. நெட்டை புடலை ரக காய் பிஞ்சாக இருக்கும் சமயத்தில் அதன் அடிப்பகுதியில் சிறிய கல்லை கட்டி விடுவதன் மூலம் 3 முதல் 4 அடி நீளத்திற்கு நீண்டு வளர்ந்து தொங்கும். ஆனால் தற்போது குட்டை வகை புடலை இரகங்கள் நீளம் குறைவாக உள்ளதால் கல்லை கட்டிவிட தேவை இல்லை. நெட்டை ரக புடலையை ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு கொண்ட செல்லும் போது அவை அதிக சேதம் உண்டாகும். ஆனால் குட்டை புடலையின் சேதாரம் குறைவே. அதனால் விவசாயிகள் குட்டை புடலையை அதிகம் சாகுபடி செய்கிறார்கள்.

 

பட்டம்

சித்திரை மற்றும் ஆடி பட்டதிலும், ஆவணி மாததிலும் புடலை நடவு செய்யலாம்.

 

இரகங்கள்

புடலை சாகுபடிக்கு கோ1, கோ2, பி.கே.எம்.1, பி.எல்.ஆர் (எஸ்.ஜி)-1, பி.எல்.ஆர்-2, கோ.எச்.1 மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை தேர்வு செய்து நடவு செய்யலாம். இதில் கோ-2 மற்றும் சி.எஸ்;.ஜி.ஹச் -1  ரகங்கள் குட்டை புடலை ரகத்தை சார்ந்தது. இந்த ரகங்கள் ஒரு அடி நீளம் வளரக்கூடியது. பி.எல்.ஆர்(எஸ்.ஜி)-1 இரகம் நெட்டை புடலை ரகத்தை சார்ந்தது. இந்த ரகம் 3-4 அடி நீளம் வளரும் தன்மையுடையது. 
எம்.டி.யு -1 என்ற ரகம் குட்டை புடலையும் இல்லாமல், நெட்டை புடலையும் இல்லாமல் நடுத்தர நீளம் உடையது. இது 2 அடி நீளம் வரை காய்கள் காய்க்கும். 

 

விதை அளவு

ஒரு ஏக்கருக்கு 350 முதல் 400 கிராம் அளவிற்கு விதை தேவைப்படும்.

 

நிலம் தயாரிப்பு

புடலை சாகுபடி செய்வதற்கு அந்த வயலில் மண் மாதிரி எடுத்து, மண்ணை பரிசோதனை செய்ய வேண்டும். மண் பரிசோதனை மூலம் மண்ணின் இயற்பியல் தன்மை, கார்பன், பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துகளின் அளவை தெரிந்து கொள்ள முடியும். அதன் பின்னர் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இடுவதன் மூலம் தேவையற்ற உரச்செலவை குறைக்க முடியும்.
புடலை சாகுபடி செய்ய உள்ள நிலத்தை 3 முதல் 5 உழவுகள் ஓட்ட வேண்டும். கடைசி உழவில் 5 டன் தொழுஉரம்  அல்லது 1 டன் மண்புழு உரம் அல்லது ஊட்டமேற்றிய தொழுஉரத்தை போட்டு உழவு ஓட்ட வேண்டும். 

 

 

நேரடி நடவு முறை

ஒரு ஏக்கருக்கு தேவையான விதையை பருத்தி துணியில் கட்டி தண்ணீர் அல்லது பஞ்சகவ்யாவில் 12 மணிநேரம் ஊறவிட்டு பின் விதைகளை (விதை நேர்த்தி செய்து) வயலில் களைக்கொத்தால் லேசாக குழி எடுத்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்தால் விதைகள் நன்கு முளைத்து வரும். செடிகள் முளைத்து வர 7 நாட்கள் ஆகும்.

 

குழித்தட்டு நாற்றங்கால் முறை

பொதுவாக நமது விவசாயிகள், கொடி வகை காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும்போது விதைகளை நேரடி நடவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். நேரடி விதை நடவு முறையில் சிறிய மழையோ, தண்ணீர் பாய்ச்சலோ, இல்லாத காலத்தில் விதையின் முளைப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது. ஆகவே குழித்தட்டு நாற்றங்காலில் விதைகளை நடவுசெய்து, 25 நாட்கள் வரை வளர்த்து, பின்பு அந்தச் செடிகளை வயலில் நடவு செய்தால், செடிகள் ஆரோக்கியமாக வளரும். முளைப்புத்திறன் 80 சதவீதத்திற்கு மேல் இருக்கும். தரமான செடியாகவும் பெறமுடியும். அதாவது காய்கறி நாற்றுகள் வளர்க்கக்கூடிய குழித்தட்டுகளை வாங்கி, அதில் மக்கவைத்த தென்னை நார்கழிவு மற்றும் மண்புழு உரத்தை 3:1 என்ற அளவில் கலந்து போடவேண்டும். பின் அந்த குழிதட்டுகளில் விதைகளை நட்டு தண்ணீர் ஊற்றி 25 நாட்கள் வளர்க்க வேண்டும்.  அவ்வாறு குழித்தட்டில் வளர்த்த நாற்றுகளை வயலில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு குழித்தட்டு முறையில் நாற்றுகளை வளர்த்து நடவு செய்வதால் செடிகள் நன்கு ஆரோக்கியத்துடன் வளரும். ஒரே சமயத்தில் சீரான செடிகளை பெறுவதுடன் 80 சதவீத செடிகள் நல்ல முளைப்புதிறனுடன் இருக்கும்.

 

பயிர் இடைவெளி

வரிசைக்கு வரிசை 10 அடியும், செடிக்கு செடி 2 அடியும் இருக்குமாறு விதைகளை/ நாற்று செடிகளை நடவு செய்ய வேண்டும்.

 

உயிர் உரம்

செடி முளைத்து வந்தவுடன் 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டிரியா ஆகிய உயிர் உரத்துடன் 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 1 கிலோ சூடோமோனாஸ் ஆகியவற்றை 50 கிலோ மக்கிய எரு அல்லது மண்புழு உரத்தில் கலந்து வயலில் ஈரம் இருக்கும் போது செடியைச்சுற்றி ஒரு அடி தூரத்தில் போட்டு மண் அணைக்கவும். ஒரு வாரம் கழித்து காய்கறி நுண்ணூட்ட உரத்தை 1 ஏக்கருக்கு 20 கிலோ மணல் அல்லது 20 கிலோ நிலத்தின் மண் கலந்து மேலாக தூவி விட வேண்டும். இவ்வறு உயிர் உரங்களை இடுவதால் மண்ணில் கிட்டாத நிலையில் இருக்கும் சத்துகளை பயிர்களுக்கு கிடைக்க செய்யும். மேலும் உயிர் பூஞ்சான கொல்லிகளை இடுவதனால் பயிர்கள் நோய் எதிர்ப்புத்தன்மை பெற்று செடி நல்ல முறையில் வளரும்.

 

நீர் நிர்வாகம்

புடலைக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் காய் அறுவடைக்கு முதல் நாள் தண்ணீர் விட்டுத்தான் காய்களை அறுவடை செய்ய வேண்டும். காய் அறுவடை செய்த மறுநாளும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லாவிட்டால் செடிகள் வாடிவிடும்.

 

களை நிர்வாகம்

சிறிய செடியாக இருக்கும் போது களைச்செடிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை வெட்ட வேண்டும். செடி வளர்ந்து பந்தலை அடைந்துவிட்டால் மாதம் ஒரு முறை களை எடுக்க வேண்டும்.

 

உர அளவு

30 நாட்களுக்கு ஒரு முறை களை எடுத்து 1 ஏக்கருக்கு டி.ஏ.பி 50 கிலோ, பொட்டாஷ; 50 கிலோ இரண்டையும் சமமாக பிரித்து இரண்டு முறை இட வேண்டும்.

நுண்ணுரம்: காய்கறி நுண்ணுரம் 1 ஏக்கருக்கு 2 கிலோ போட வேண்டும்.

 

இலைப்பேன்

இலைப்பேன் இலையின் பின்பகுதியில் சிவப்பு நிற செம்பேன்கள் கூட்டமாக இருந்து சாற்றை உறுஞ்சுவதால் இலைகள் வெளுத்து காணப்படும். செம்பேன் தாக்குதலால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த செம்பேன்களை கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி இமிடாகுளோர் அல்லது  1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி புரப்பனோபாஸ் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இயற்கை முறையில் கட்டுப்படுத்த 4 கிராம் பிவேரியா, 4 கிராம் வெர்டிசீலியம், 4கிராம் மெட்டரைசியம் ஆகிய பூஞ்சானங்களை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து புடலை கொடிகள் நன்கு நனையுமாறு தெளிப்பதன் மூலம் இலைப்பேன், அசுவுனி, வெள்ளை ஈ, காய்ப்புழு போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

 

அசுவுனி தாக்கம்

அசுவுனி செடிகளின் நுனி இலைகளில் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சும் இதனால் கொடியின் வளர்ச்சி பாதிப்படையும். இந்த அசுவுனிகளை கட்டுப்படுத்த மஞ்சள் அட்டை ஒட்டு பொறி போன்று ஊதாநிற ஒட்டும் பொறிகளையும் வாங்கி ஒரு ஏக்கருக்கு 6 இடத்தில் அசையாமல்; வயலில் கட்டிவைத்து கட்டுப்படுத்தலாம். அதாவது அந்த ஊதாநிறம் அசுவுனிகளை கவர்திழுக்கும் இதனால் அந்த அட்டையில் உள்ள பசையில் பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும். 

 

வெள்ளை ஈ

வெள்ளை ஈக்கள் இலையின் சாற்றை உறுஞ்சுவதால் பச்சையம் இன்றி இலைகள் வெளுத்து காணப்படும். செடியின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். இந்த வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, மஞ்சள் அட்டை ஒட்டும் பொறியை ஒரு ஏக்கருக்கு 6 இடத்தில் காற்றில் அசையாமல் கட்டி கட்டுப்படுத்தலாம் அல்லது 1 லிட்டர் தண்ணீருக்கு ½ கிராம் அட்டாரா என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

கோலப்பூச்சி (இலை துளைப்பான்)

புடலையில் கோலப்பூச்சி தாக்குதலால்; இலையில் கோடுகோடாக மினுமினுப்புடன் இருக்கும். இதனால் கொடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த கோலப்பூச்சியை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி இமிடாகுளோர் என்ற அளவில் கலந்து மாலை வேலையில் தெளித்து கோலப்பூச்சியை கட்டுப்படுத்தலாம் அல்லது ஊதாநிற ஒட்டும் பொறிகளை வாங்கி ஒரு ஏக்கருக்கு 6 இடத்தில் அசையாமல் வயலில் கட்டிவைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

 

காய்ப்புழு

காய்ப்புழுக்கள் புடலையில் பூ, பிஞ்சு போன்றவற்றைத் தாக்கும். இதனால் காய்களை பயன்படுத்த முடியாமல் போய்விடும். காய்ப்புழுவினை இயற்கை முறையில்  கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டையை  1 ஏக்கருக்கு 4 சிசி என்ற அளவில் கட்டலாம். அல்லது இரசாயன முறையில் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 400 மில்லி  குளோரிபைரிபாஸ் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

பழ ஈ தாக்கம்

பழ ஈக்கள், புடலை காய்களை கடித்து சேதப்படுத்தும். மேலும் அதனுள் முட்டைகளையும் இடும். இதனால் காய்களில் சிறு புள்ளிகள் தோன்றி பின் அழுகி விடும். பழ ஈக்களின் பாதிப்பு வராமல் இருக்க அல்லது அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த, பழ ஈக்களை கவரக்கூடிய இனக்கவர்ச்சி பொறியை வாங்கி அதை ஏக்கருக்கு 5 முதல் 6 இடத்தில்  அதாவது நிழல் பகுதியில் ஆடாமல் கட்டிவைத்து விட வேண்டும். இதில் உள்ள கவர்ச்சி பொறி மாத்திரை (லூர); பழ ஈக்களை கவர்ந்து இழுக்கும். கவர்ந்திழுக்கப்பட்ட ஆண் ஈக்கள் பொறியில் விழுந்து இறந்துவிடும். இதனால் இனப்பெருக்கம் தடைபெற்று பூச்சிகளின் தாக்கம் குறைந்துவிடும். 

 

நூற்புழு தாக்கம்

புடலையில் நூற்புழு தாக்கப்பட்ட கொடியின் தண்டுப்பகுதி பூமியில் இருந்து 1 அடியில்  வீங்கி காணப்படும். தண்டுப்பகுதி வீங்கி இருந்தால் கொடி காய்ப்புத்தன்மை குறையும், கொடியின்; வளர்ச்சி குறையும், மகசூல் பாதிக்கும். நூற்புழுவை கட்டுப்படுத்த ஓரு ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு வேர் அருகில் போட்டு மண் அனைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அல்லது பெசிலியோமைசிஸ் மற்றும் சூடோமோனஸ்யை 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து வேரில் ஊற்ற வேண்டும்.
புடலையில் நூறப்;புழு தாக்கம் வராமல் இருக்க கொடியை சுற்றி சாமந்தி பூ செடிகளை (Mary Gold) நட்டு வைத்து நூற்புழு தாக்குதல் வராமல் தவிர்க்கலாம். 

 

 

வேர் அழுகல் நோய்

விதை நடவு செய்து 30 நாட்களுக்குள் வேர் அழுகல் நோய் வரக்கூடும். இந்நோயினால் செடியின் இலைகள் பழுத்து கொடியுடன் காய்ந்து விடும். வேரினை பிடுங்கி பார்த்தால் வேர் கருமை நிறமாகி அழுகி காணப்படும். வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த, முதலில் நீர் பாய்ச்சுவதை குறைக்க வேண்டும் பின்னர் 1 ஏக்கருக்கு 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிலோ சூடோமோனாஸ்-ஐ கரைத்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும் அல்லது 25 கிலோவை வேப்பங்கொட்டை தூளை வேரைச்சுற்றி இட்டு மண்ணை மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

 

மஞ்சள் இலை வைரஸ் நோய்

புடலையில்  மஞ்சள் இலை வைரஸ் நோயை பரப்புவது வெள்ளை ஈக்கள். இதனால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி கொடி ஓடாமல், பூ பூக்காது, கொடி காய்ந்துவிடும். அதனால் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் அட்டை ஒட்டு; பொறிகளை ஒரு ஏக்கருக்கு 6 இடத்தில் கட்டிவைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். இவ்வாறு மஞ்சள் இலை வைரஸ் நோயை கட்டுப்படுத்தலாம்.

 

ஊடுபயிர்

புடலையில் ஊடுபயிராக முள்ளங்கி, பீட்ரூட், கீரை, கொத்தவரை, வெங்காயம் போன்ற குறைந்த நாட்கள்; உடைய பயிர்களை சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெறலாம். மேலும் வயலைச்சுற்றி அகத்தி நடுவதன் மூலம் காற்று அடிக்கும் சமயத்தில் பூ, பிஞ்சுகள் உதிர்வதை தடுக்க முடியும்.