வாழ்நாள் கல்வி

இயற்கை இடுபொருட்கள்

பஞ்சகவ்யா தயாரித்தல்

இயற்கை இடுபொருட்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

இரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்தி வந்ததால் மண்வளம் பாதிப்பு அடைந்துள்ளது. மண்வளத்தை பாதுகாக்க விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்கின்றனர். இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது பஞ்சகவ்யா இவற்றை நம் வீட்டில் வளர்க்கக் கூடிய பசுவினுடைய 5 பொருட்களை   கொண்டு குறைந்த செலவில் தயாரித்து  பயிர்களுக்கு  தெளிப்பதால் கூடுதல்  மகசூலும் கிடைக்கும். 

 

பஞ்சகவ்யாவின் பயன்கள்

  • 75 சதவீதம் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், 25 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது
  • பஞ்சகவ்யாவை பயன்படுத்துவதால் பயிர் ஓரே சீராக வளர்கிறது
  • சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படுத்தாது
  • பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
  • பஞ்சக்கவ்யாவில் 13 வகையான  நுண்ணூட்டச் சத்துக்களும் உள்ளது
  • கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது
  • சைட்டோகைனின் எனும் வளர்ச்சி ஊக்கி,  அமினோ அமிலம் 
  • மற்றும் அனைத்து வகை தாதுக்கள் (மினரல்ஸ்) உள்ளன
  • குறைந்த செலவில் தயாரிக்கும் இடுபொருள்கள்
  • மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்
  • காய்கறிகளுக்கு சுவையும், மணமும் கூடும்,  காய்கறிகள் தரமானதாக இருக்கும் சந்தையில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது
  • இதில் நன்மை செய்யும்  நுண்ணுயிரிகள் குறிப்பாக பாக்டீரியா & பூஞ்சைகள் உள்ளது

 

 

பஞ்சகவ்யா தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

  • பசுஞ்சாணம் 5 கிலோ
  • பசுமாட்டு கோமியம் 4 லிட்டர்
  • பசும்பால் 3 லிட்டர்
  • நன்கு புளித்த தயிர் 2 லிட்டர்
  • பசுமாட்டு நெய் அரை லிட்டர்
  • இளநீர் 2 
  • வாழைப்பழம் 12
  • நம்முடைய நிலத்தின் மண் கொஞ்சம் 
  • நாட்டுச் சர்க்கரை ( காப்பி அல்லது கருமை நிற வெல்லம்) அரைக்கிலோ
 

தயாரிக்கும் முறை

முதல் படி

பசுஞ்சாணி 5 கிலோவுடன், பசுமாட்டு நெய் அரை லிட்டரை கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைக்கவும் தினம் ஒரு முறை இதை பிசைந்து விடவும்.

இரண்டாம்படி

நான்காவது நாள் ஒரு வாயகன்ற மண்பானை, அல்லது சிமெண்டுத் தொட்டி அல்லது டிரமில்  அனைத்துப் பொருட்களையும் போட்டுக் கையால் நன்கு கரைத்து, கம்பி வலையால் வாயை மூடி நிழலில் வைக்கவும். தினம் காலை, மாலை இரு வேளை  பல முறை நன்கு கலக்கி விடவும். அதிகம் கலக்கினால் கலவைக்கு அதிகக் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்கள் அபரிவிதமாகப் பெருகி மிகுந்த பலன் கொடுக்கும்.

குறிப்பு : அலுமினிய பாத்திரம் பயன்படுத்தக் கூடாது.

மூன்றாம்படி

 இப்படி 22 நாட்கள் கலக்கி வந்தால் பஞ்சகவ்யா கரைசல் தயாராகிவிடும். இதை ஆறுமாதம் வரை தினமும் கலக்கி விட்டு, கெடாமல் வைத்துப் பயன் படுத்தலாம். தண்ணீர் குறைந்து கலவை கெட்டியானால் மீண்டும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கலக்கினால் கலவைக்கு அதிக பலன் உண்டு

 

பயன்படுத்தும் பயிர்கள்

காய்கறிகள், கொடிவகைகள், பணப்பயிர்கள் ,தானியப்பயிர்கள், பயறுவகைப் பயிர்கள், எண்ணைவித்து. மரப்பயிர்கள்; போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 

 

 

பயன்படுத்தும் முறை

காய்கறி பயிர்களுக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற விகிதத்தில் பூ எடுத்த பின் வாரம் இருமுறை அடிக்கலாம்

மரப்பயிர்களான மா, சப்போட்டா, மாதுளை , எலுமிச்சை , நெல்லி, வாழை,  பூ  எடுப்பதற்கு ஒரு மாதத்திற்கு ஒரு முறையும் பூ எடுத்த பின்பு 15 நாட்களுக்கு ஒருமுறையும் அடிக்கலாம். பிஞ்சு எடுத்த பின்பும் அடிக்கலாம்

விதை நேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 200 மில்லி பஞ்சகவ்யாவை 30 நிமிடம் ஊறவைத்து நடலாம். கெட்டி தோல் உள்ள விதைக்கு 60 நிமிடம் ஊறவைத்து நடலாம்.

100 லிட்டர் தண்ணீருக்கு 20 லிட்டர் பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து சொட்டு நீர் பாசனத்தில் விடலாம். எருவில் கலந்து ஊட்டமேற்றி போடலாம்.

பஞ்சகவ்யாவுடன் மற்ற அனைத்து இயற்கை இடுபொருட்களையும் சேர்த்து  பயன்படுத்தலாம்.

நெய் செலவு அதிகம் எனில் நெய்யின் அளவை பாதியாக குறைத்து அதுனுடன் அரைக்கிலோ கடலை பிண்ணாக்கை ஊறவைத்து பயன்படுத்தலாம்.

குறிப்பு :

பஞ்சகவ்யா கலவை தயாரிக்கும் பொழுது  சரியாக கலக்காமலோ அல்லது இடுபொருளகள்; தரமில்லாமல்  இருந்தாலோ பஞ்சகவ்யத்தில் புழுக்கள் வர ஆரம்பிக்கும். அதனை தடுக்க தயாரிக்கும் டிரம்மில் வேப்ப எண்ணெய் தடவி விட்டால் புழுக்கள் வராது. அல்லது 10 மில்லி வேப்ப எண்ணெய் பஞ்சகவ்யாவில் ஊற்றலாம்.

பஞ்சகவ்யாவின் கார அமிலத் தன்மை 6.5 வழ 7.5  இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நொதித்தல் நடைபெற்று பஞ்சகவ்யா தரம் கெட்டுவிடும். 

பாட்டிலில் அடைத்து வைக்கும் போது நொதித்தல் நடைபெற்று பாட்டில் உப்பினால் 20 மில்லி சோற்றுக் கற்றாளைச்சாறு ஊற்றி 6 மாதம் வரை பாதுகாக்கலாம்.

 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை (RSGA)
கிட்டம்பட்டி, கசவணம்பட்டி அஞ்சல், கன்னிவாடி வழி,
திண்டுக்கல் மாவட்டம் - 624 705.
போன் நம்பர் - 0451-2555745 
மின்னஞ்சல் rsgaseed @gmail.com 
வலைதளம்; -WWW.L3FTN.COM, rsga.co.in
முகநூல்  Facebook /rsgaseedkannivadi
Youtube    - rsgaseed

 

 

முடிவுரை

பஞ்சகவ்யா தயாரித்து பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்போ, பக்கவிளைவோ ஏற்படாது. எனவே விவசாயிகள் குறைந்த செலவில் அதிக உற்பத்தியை பெருக்க இயற்கை முறையில் பஞ்சகவ்யா தயாரித்து பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம்.