வாழ்நாள் கல்வி

அவரை சாகுபடி தொழில்நுட்பம்

அவரை சாகுபடி தொழில்நுட்பம்

அவரை சாகுபடி தொழில்நுட்பம்

Facebook twitter googleplus pinterest LinkedIn


பட்டம்

ஆடி, ஆவணி ஆகிய பட்டங்களில் அவரை சாகுபடி செய்யலாம். செடி அவரையை ஆண்டு முழுவதும் பயிர்செய்யலாம். சித்திரை பட்டத்தில் மலை பகுதிகளில் அவரையை சாகுபடி செய்யலாம். 

 

அவரை இரகங்கள்

பட்டை அவரை, கோழி அவரை, பட்டை சிகப்பு, நெட்டு சிகப்பு, குட்டை அவரை போன்ற இரகங்கள் உள்ளது.

 

விதை அளவு

பந்தல் முறையில் அவரை சாகுபடி செய்தால் ஏக்கருக்கு 2 கிலோ விதையும், செடி அவரைக்கு 8 கிலோ விதையும் தேவைப்படும்.

 

விதைநேர்த்தி

விதைகளை நடுவதற்கு முன் ரைசோபியம் 200 கிராம், பாஸ்போபாக்டீரியா 200 கிராம், டிரைக்கோடெர்மா விரிடி 100 கிராம், சூடோமோனஸ் புளுரசன்ஸ் 100 கிராம் ஆகியவற்றை ஆறிய அரிசி வடி கஞ்சியில் கலந்து விதைநேர்த்தி செய்து 24 மணி நேரத்திற்குள் நடவு செய்ய வேண்டும். 

 

நிலம் தயாரிப்பு

மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரங்களை இடவேண்டும். அவ்வாறு மண்பரிசோதனை செய்து உரமிடுவதன் மூலம் தேவைக்கு அதிகமான உரமிடுவதை தவிற்த்து உர செலவையும் குறைக்க முடியும். அதனால் நிலத்தை உழுவதற்கு முன் மண் பரிசோதனை முக்கியமாக செய்ய வேண்டும். அதன் பிறகு மண் நன்றாக பொழபொழப்பாகும் அளவிற்கு அழமாக உழவு ஒட்ட வேண்டும். செடி அவரைக்கு பாத்தி முறையை பின்பற்ற வேண்டும் கடைசி உழவின் போது 5 டன் தொழுஉரம் அல்லது 2 டன் ஊட்டமேற்றிய தொழு உரம் இடவேண்டும். 

 

நீர் பாய்ச்சும் முறை

நீர் பாய்ச்சுதலை நான்கு நாட்களுக்கு ஓரு முறை அல்லது பருவ சூழ்நிலை மற்றும் மண்ணின் ஈரப்பதத்தினை பொருத்து பாய்ச்ச வேண்டும். மேலும் காய் அறுவடைக்கு முதல் நாள் தண்ணீர் பாய்ச்சிய பின்பு காய்களை அறுவடை செய்ய வேண்டும். காய் அறுவடை செய்த பின் மறுநாளும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லாவிட்டால் செடி வாடி காணப்படும். பூ பூக்கும் போது, காய் காய்க்கும் போதும் மற்றும் செடியின் வளர்ச்சி பருவங்களுக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 

 

நடவு முறை

கொடி அவரை வரிசைக்கு வரிசை 10 அடியும், செடிக்கு செடி 2 அடியும் விட்டு நடவு செய்ய வேண்டும். 


செடி அவரை பாத்திக்கு பாத்தி 3 அடியும் செடிக்கு செடி 1 ½ அடி என்ற இடைவெளியில் விதைகளை நடவு செய்ய வேண்டும். 

 

உர அளவு

பந்தல் அவரைக்கான உர நிர்வாகமாக நன்கு மக்கிய தொழுஉரம் ஒரு ஏக்கருக்கு 1 டன் என்ற அளவில் குழிக்கு 2 கிலோ வீதம் இடவேண்டும். மேலும் ஓரு ஏக்கருக்கு 50 கிலோ டி.ஏ.பியை குழிக்கு 50 கிராம் என்ற அளவில் செடியிலிருந்து 1 அடி தள்ளி வைத்து மண் அணைக்க வேண்டும். செடி அவரைக்கும் 50 கிலோ டி.ஏ.பி.யை இம்முறையில் இடவேண்டும்.

 

மேலுரம்

விதை நடவு செய்து 40 நாட்கள் ஆனவுடன் இரண்டாவது உரமாக மேலுரம், பாக்டம்பாஸ் 50 கிலோ இடவேண்டும். செடி மிகவும் பச்சையாக இருந்தால் உரத்தின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். பயறுவகை நுண்ணுட்டத்தை ஒரு ஏக்கருக்கு 2 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து செடிக்கு செடி இடவேண்டும்.

 

உயிர் உரம்

அவரை நடவு செய்த ஒரு வாரத்திற்குள் 2 கிலோ ரைசோபியம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 1 கிலோ டிரைக்கோடர்மா விரிடி, 1 கிலோ சூடோமோனாஸ் ஆகியவற்றை 100 கிலோ மக்கிய எருவில் கலந்து அதனை ஒரு வாரம் நிiலில் வைத்து பின் வயலில் ஈரம் இருக்கும்போது இடவேண்டும்.

 

சாறு உறிஞ்சும் பூச்சி

அசுவினி தாக்கம் இருந்தால் தாக்கப்பட்ட இலையின் மேல் எறும்புகள் இருக்கும். இலையின் உள் பகுதி மடங்கி இருக்கும். அவரையில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஓரு லிட்டர் தண்ணீருக்கு இமிடாகுளோர் 1 மில்லி / அசிபேட் 2 கிராம், நிம்பிசிடின் 3 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் அல்லது வெர்டிசீலியம் மற்றும் பிவேரியா என்னும் பூஞ்சானத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

 

காய்ப்புழு

காய்புழுவை உருவாக்கும் தாய் அந்துப் பூச்சியானது முட்டைகளை பூவில் இட்டு விடுவதால் காய்ப்புழு உருவாகிறது. இதனால் காய்ப்புழு தாககத்தின் போது பூ மற்றும் பிஞ்சுகள்  உதிர்ந்து விடும். காய்ப்புழுவை கட்டுப்படுத்த 1 ஏக்கருக்கு 4 சிசி டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி அட்டை கட்டலாம். காய்ப்புழுவிற்கான இனக்கவர்ச்சிப் பொறி ஒரு ஏக்கருக்கு 6  இடத்தில் பயிருக்கு ஒரு அடிக்கு மேல் (செடி அவரை) இருக்குமாறு வைத்து ஆண் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம.; கொடி அவரைக்கு பந்தலில் கட்டி வைத்து காய்ப்புழு தாக்கத்தை குறைக்கலாம் அல்லது பிவேரியாவை என்னும் பூங்சானத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இராசயன முறையில் கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் ஒரு லிட்டருக்கு 4 மில்லி மருந்துடன் டைக்குளோராவாஸ் 1 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தவும்.

 

கோலப்பூச்சி

இலைகளின் மீது வெள்ளை நிற கோடுகள் மினு மினுப்புடன் இருக்கு. இது கோலப்புச்சியின் தாக்கம். இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மில்லி மோனாகுரோட்டோபாஸ் மருந்து என்ன அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தவும். இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஊதா நிற ஒட்டுபொறி அட்டையை ஏக்கருக்கு 6 இடத்தில் கட்டிவைத்து கட்டுப்படுத்தலாம்.

 

நூற்புழு தாக்குதல்

நூற்புழு தாக்கப்பட்ட அவரைச்செடியின் தண்டுப்பகுதி தரையில்; இருந்து ஓரு அடிக்கு மேல் வீங்கி காணப்படும். இலைகளும் மஞ்சல் நிறமாக மாறி உதிர்ந்து விடும். சில சமயங்களில் தண்டு வீங்கிய இடத்தில் செடி ஓடிந்து காய்ந்து விடும். அவரையில் நூற்புழுவினை கட்டுப்படுத்த ஓரு ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு வேர் அருகில் போட்டு மண் அணைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும் அல்லது பெசிலியோமைசிஸ்யை 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து வேரில் ஊற்ற வேண்டும்.

கொடி அவரையில் நூற்புழு தாக்கம் வராமல் இருக்க கொடியை சுற்றி சாமந்தி பூ செடிகளை நட்டு வைத்து நூற்புழு தாக்குதல் வராமல் தவிற்கலாம். செடி அவரைக்கு மூன்று வருசைக்கு ஒரு வரிசையும், வரப்பின் ஓரத்திலும் சாமந்தி பூ செடிகளை நட்டுவைத்து நூற்புழுவை கட்டுப்படுத்தலாம்.

 

காய் அழுகல் நோய்

அவரையில் காய் அழுகல் நோயினால் காயின் மேல் நீர்க்கசிவுடன் கூடிய சிறிய புள்ளிகள் தோன்றும்.  நாளடைவில் வட்ட வடிவில் கரும்பழுப்பு நிறத்தில் மாறும். இலையின் அடிப்பாகத்தில் இதன் தாக்குதலைக் எளிதாக காணலாம். இந்நோய் விதை மூலம் பரவுகிறது. இந்த அழுகல் நோயினை கட்டுப்படுத்த விதைப்பிற்கு முன் 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்து 24 மணிநேரம் கழித்து விதைக்க வேண்டும். வயலில் அறிகுறிகள் தென்பட்டால் கார்பன்டாசிம் 200 கிராம் அல்லது மான்கோசெப் 400 கிராம் மருந்தினை 200 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும். இயற்கை முறையில் கட்டுப்படுத்த சூடோமோனாஸ்யை மற்றும் பேசில்லஸ் சப்டிலஸை 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

 

துரு நோய்

அவரையில் துரு நோய் இலைகளையே அதிகம் தாக்குகிறது. முதலில் வெண்மை நிற சிறு புள்ளிகளாகத் தோன்றி நாளடைவில் இலை முழுவதும் செங்கல் பொடியினை தூவியதைப் போல் தோன்றும். பின்னர் இலை முழுவதும் மஞ்சள் நிறமாகி உதிர்ந்து விடும். இந்நோய் சுமார் 30% வரை விவசாயிகளுக்கு மகசூல் இழப்பினை ஏற்படுத்தும். ஆதனால் அவரை நடும் போது தேவையான இடைவெளிவிட்டு நடவு செய்யவேண்டும். துரு நோய் பாதித்த அவரை வயலில் 1 லிட்டர் தண்ணிருக்கு 2 கிராம் மான்கோசெப் மருந்து என்ற வீதத்தில் கலந்து இலைகளின் மேலும் கீழும் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.  தேவைக்கேற்ப இரண்டாவது முறையும் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து துரு நோயினை கடடுப்படுத்தலாம். அல்லது இயற்கை முறையில் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீருக்கு டிரைக்கோடெர்மா விரிடி 10 கிராம், சூடோமோனஸ் புளுரசன்ஸ் 10 கிராம் ஆகியவற்றை கலந்து தெளிக்கவும். 

 

வேர் அழுகல் நோய்

வேர் அழுகல் ஏற்பட்டால் செடியின் இலைகள் பழுத்து இலைகள் கொட்டியவுடன் செடி காய்ந்து விடும். வேரினை பிடுங்கி பார்த்தால் வேர் கருமை நிறமாக அழுகி காணப்படும். நுகர்ந்து பார்த்தால் கெட்ட வாடை வீசும். இந்த வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த விதைத்த 1 வாரத்தில் டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ அல்லது 25 கிலோவை வேப்பங்கொட்டை தூள்ளை வேரை சுற்றி இட்டு மண்ணை மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

 

ஊடுபயிர்

பந்தல் அவரையில் ஊடுபயிராக முள்ளங்கி, பீட்ரூட், கீரை, கொத்தவரை, வெங்காயம் போன்ற குறைந்த நாள் உடைய பயிர்களை சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெறலாம்.