வாழ்நாள் கல்வி

தென்னையில் குரும்பைகள் உதிர்வதற்கான காரணங்கள்

தென்னையில் குரும்பைகள் உதிர்வதற்கான காரணங்கள்

தென்னையில் குரும்பைகள் உதிர்வதற்கான காரணங்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

தென்னையில் குரும்பு உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக தாய் மரத்தின் பாரம்பரிய குணாதிசயம், மண்வளக் குறைபாடு (சத்து குறைப்பாடு), வளர்ச்சியூக்கி பற்றாக்குறை, நுண்ணூட்ட பற்றாக்குறை, பேரூட்ட குறைபாடு, மகரந்தச் சேர்க்கையின்மை,  பூச்சி மற்றும் நோய் தாக்கம் மற்றும் வறட்சி ஆகிய காரணங்களினால் தென்னையில் குரும்பைகள் உதிருகின்றன. அதனால் விவசாயிகள், மரத்தில் குரும்பைகள் உதிர்வதற்கான காரணங்களை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

 

தாய் மரத்தின் குணாதிசயம்

ஒரு சில தென்னை மரங்கள் பாரம்பரிய குணாதிசயத்தால் ஒரு குழைக்கு இரண்டு, மூன்று காய்கள் மட்டுமே காய்க்கும். இவ்வகை தென்னை மரங்களில் இருந்து நெத்து எடுத்து, வளர்த்த கன்றுகள் தாய் மரத்தின் குணாதிசயம் போன்றே காய்கள் குறைவாக காய்க்கும். அதனால் நன்றாக காய்க்கும் தாய் மரத்தில் இருந்து நெத்துகளை சேகரித்து அவற்றின் மூலம் கன்றுகளை வளர்க்க வேண்டும்.

 

மண்வளக் குறைபாடு

தென்னையில் குரும்பு உதிர்வதற்கு மண்வளக் குறைபாடும் ஒரு காரணம். மண்ணில் தேவையான சத்துக்கள் இல்லாததால் தென்னையில் குரும்பைகள் உதிர்கின்றன. அதனால் மண்வளக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய, மண்ணை மாதிரி எடுத்து அருகில் உள்ள மண் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி சோதனை செய்து மண்ணின் கார அமிலத் தன்மையை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உரமிட வேண்டும். அதாவது மண்ணின் கார அமில தன்மை ஐந்துக்கும் குறைவாக இருந்தால், மரம் ஓன்றுக்கு 2 கிலோ சுண்ணாம்பும்இ கார அமிலத்தன்மை 8.5 க்கு மேல் இருந்தால் 4 கிலோ ஜிப்சமும் இடவேண்டும். 

 

வளர்ச்சியூக்கி பற்றாக்குறை

தென்னை மரங்களில் ஆக்ஸின்கள் மற்றும் ஜிப்ரலிக் குறைபாட்டால் பூ மற்றும் குரும்பைகள் உதிரும். இந்த வளர்ச்சியூக்கி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 1 லிட்டர் புளித்த மோரில் 50 கிராம் பெருங்காயத்தூள், நன்கு அரைத்த ½ கிலோ முருங்கை இலை ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து அதனை வடிகட்டி மரம் ஒன்றுக்கு 100 மில்லி வீதம் வேர் வழியாக செலுத்த வேண்டும்.

 

நுண்ணூட்ட பற்றாக்குறை

தென்னையில் நுண்ணுட்ட பற்றாக்குறையினால் குரும்பைகள் உதிரும். மெக்னீசியப் பற்றாக்குறை இருந்தால் இலையின் நுனி மஞ்சள் நிறமாகவும், அடிப்பகுதி பச்சையாகவும் இருக்கும். போரான் குறைபாடு இருக்கும் போது இளம் கன்றுகளில் இலை பிரியாமல், வளரும் குருத்தின் இலைகள் வளராமல் காணப்படும். இதனால் வளர்ந்த மரங்களில் இளம் பிஞ்சுகள் காய்ந்து உதிரும். காய்களில் வெற்றுத் தேங்காய் அதிகமாக இருக்கும். மேலும் காய்கள் நீளமாகவும் எடை குறைந்தும் காணப்படும். முக்கியமாக காய்களில் வெடிப்புகள் தோன்றும். இந்த நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய நன்றாக வளர்ந்த மரத்திற்கு வருடத்திற்கு ஒரு கிலோ தென்னை நுண்ணூட்டச்சத்து உரத்தினை இடவேண்டும் அல்லது 200 மிலி தென்னை ஊட்டச்சத்து கரைசலை 6 மாதங்களுக்கு ஒரு முறை இளம் வேர்களின் வழியே செலுத்த வேண்டும்.

 

பேரூட்ட குறைபாடு

மரத்தின் அடி இலைகள் மஞ்சள் நிறமாகி பின்னர் பழுப்பு நிறமாக மாறி கீழ் நோக்கி தொங்கும்.  நாளடைவில் முதிர்ச்சி அடையும் முன்னரே உதிர்ந்து விடும். தேங்காயின் அளவு சிறுத்து எண்ணிக்கை குறைந்து காணப்படும்.  அப்போது 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை மரத்தில் இருந்து 5 அடி தள்ளி, ஜீன் மாதம் ஒரு முறையும், டிசம்பர் மாதம் இரண்டாம் முறையும் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

 

மகரந்தச் சேர்க்கையின்மை

தென்னை மரங்களில் மகரந்தச் சேர்க்கையில் ஏற்படும் குறைபாட்டின் காரணமாக, மரங்களில் காய்கள் குறைவாக காய்க்கும். இந்த மகரந்தச் சேர்க்கை குறைபாட்டை போக்க தென்னந்தோப்புகளில் தேனீ வளர்க்கலாம். தேனீக்கள் அயல்மகரந்த சேர்கை ஏற்பட உதவுவதால் காய்கள் அதிகம் காய்க்கும்.

 

பூச்சித் தாக்கம்

பூச்சி தாக்கத்தால் தென்னையில் குரும்பைகள் அதிகம் உதிரும். குறிப்பாக ஈரீயோபைட் சிலந்தி தாக்கத்தால் அதிகளவு குரும்பைகள் உதிர்கின்றது, இதனால் விவசாயிகளுக்கு அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது.  ஒருசில பகுதிகளில் தட்டைக்கால் நாவாய் பூச்சி தாக்கத்தால் தென்னையில் குரும்பைகள் உதிர்கின்றது. இப்பூச்சிகள் தவிர அணில், எலி இவற்றின் தாக்கத்தினாலும் தென்னையில் குரும்பைகள் விழக்கூடும்.

 

கடும் வறட்சி

தென்னை மரங்களுக்கு அதிகளவிற்கு தண்ணீர் தேவைப்படும், போதிய அளவு தண்ணீர் கிடைக்காத சமயத்தில் தென்னையில் பூக்களும், குரும்பைகளும் உதிரும். ஒரு தென்னை மரத்திற்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 லிட்டர் முதல் 150 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சினால் 22 முதல் 60 லிட்டர் தண்ணீர் போதுமானது.  அதனால் தென்னை சாகுபடிக்கு தண்ணீர் மிகவும் முக்கியம்.