வாழ்நாள் கல்வி

பணப்பயிர் சாகுபடி

பருத்தியில் இலைகருகல் நோய்தாக்குதல்

பணப்பயிர் சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பருத்தி செடிகளில் வரக்கூடிய இலைக்கருகல் நுண்ணூட்டசத்து பற்றாக்குறை காரணத்தாலும், பாக்டீரியா மூலம் பரவும் நோய்களாலும் வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக மகசூல் இழப்பு ஏற்ப்படும். பருத்தி பயிருக்கு தேவைபடும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு குறையும் போது இலைகளில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்ப்படுகிறது. இந்த மாற்றங்களின் அறிகுறிகளை வைத்து பருத்தியில் எவ்வகையான சத்து பற்றாக்குறை உள்ளது என தெரிந்து கொள்ள முடியும். 

 

பருத்தி செடிகளில் ஏற்படும் இலைக்கருகலுக்கான காரணங்கள்

பொதுவாக பருத்தி செடிகளில் இலைகருகல் இரண்டு காரணத்தால் வரும். முதலாவதாக பருத்தி செடிகளின் இலைகளில் ஓரங்களில் கருகியது போன்று காய்ந்து இருந்தால், அது நுண்ணூட்ட பற்றாக்குறையின் அறிகுறி. இரண்டாவதாக பருத்தி இலைகளில் நடுப்பகுதிகளில் வட்ட வடிவிலான புள்ளிகளும், ஒழுங்கற்ற புள்ளிகளும் மற்றும் நரம்புப்பகுதிகளிலும் காய்;ந்திருக்கும், இவ்வகை அறிகுறிகள் இருந்தால் அது நோய் தாக்குதலின் அறிகுறிகள் ஆகும். இந்த இரண்டு காரணங்களினாலும் பருத்தி இலைகளில் கருகல் ஏற்படக்கூடும். அதனால் விவசாயிகள் பருத்தி செடிகளில் தென்படக்கூடிய நுண்ணூட்ட பற்றாக்குறையின் அறிகுறிகள் மற்றும் நோய்க்கான அறிகுறிகள், இவற்றிற்கு உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொண்டு பின் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். 

 

சாம்பல்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இலைகருகல் அறிகுறி

பருத்தியில் சாம்பல்ச்சத்து குறைபாட்டினால் இலைகளின் ஓரங்கள் கிழிந்து, மஞ்சல் கலந்த பழுப்பு நிறத்துடன் காணப்படும். இலைகளின் ஓரங்கள் கரிகியது போன்று இருக்கும். காய்களும் முதிராமல் நீண்ட நாட்கள் இருக்கும். இதனை நிவர்த்தி செய்ய 10 கிராம் பொட்டாசியம் குளோரைடு உப்பினை 1 லிட்டர் நீரில் கரைத்து செடியில் பூ பூக்கும் போதும், காய் வெடிக்க ஆரம்பிக்கும் போதும் தெளிக்க வேண்டும்.

 

மெக்னீசியம் சத்து குறைபாட்டினால் ஏற்படும் இலைக்கருகலுக்கான அறிகுறி

செடியின் அடிப்பாகத்தில் உள்ள இலைகள் குங்குமச் சிவப்பு நிறமாக மாறும். ஆனால் நரம்புகள் பச்சை நிறமாகவே காணப்படும். இலைகள் முதிரும் முன்பே உதிர்ந்து விடும். நிவர்த்தி செய்ய 20 கிராம் மெக்னிசியம் சல்பேட்டை 10 கிராம் யூரியாவுடன் சேர்த்து ஒரு லிட்டர் நீரில் கரைத்து குறைபாட்டின் அறிகுறிகள் மறையும் வரை இரண்டு  வாரங்களுக்கு  ஒரு  முறை  தெளிக்க  வேண்டும்.

 

தயிர்ப்புள்ளி நோயினால் ஏற்படும் இலைக்கருகல்

பருத்தியை தாக்கும் தயிர்ப்புள்ளி நோய் ராமுலேரியா என்ற பூஞ்சைகளால் ஏற்படுகிறது. தயிர்ப்புள்ளி; நோய் தாக்கப்பட்ட இலைகளின்; அடிப்பகுதியில் தயிர் நிறமுடைய புள்ளிகள் தோன்றும். இலைகளின் மேற்பரப்பில் சாம்பல் நிற நுண்துகள்கள் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் நுணியிலிருந்து உள்நோக்கி காயத்தொடங்கும்; பின் மஞ்சள் நிறமாகி, இளம் இலைகள் உதிர்ந்துவிடும். இந்நோய் 10 முதல் 20 சதவீதம் வரையிலான விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் குளிர் காலங்களில் இந்;நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும். தயிர்ப்புள்ளி; நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டசிம் அல்லது 200 மில்லி புரோபிகோனசோல் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

பாக்டீரியல் இலைக்கருகல் நோய்

பாக்டீரியல் இலைக்கருகல் நோய் செந்தோமோனாஸ் என்ற பாக்டீரியத்தினால் ஏற்படுகின்றது. இந்த பாக்டீரிய பருத்தி செடியின் அனைத்து பகுதியையும் தாக்கும். இந்நோயால் நாற்றுக்கருகல், கருங்கிளை, இளைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் பல நோய்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது. இந்நோயை கட்டுப்படுத்த சுடோமோனாஸ் 5 கிராம், பேசில்லஸ் 5 கிராம், 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

ஆல்டர்நேரியா இலைக்கருகல் நோய்

ஆல்டர்நேரியா இலைக்கருகல் நோய் எல்லா பருவத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நடவு செய்து 45-60-ஆம் நாளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட இலைகளில் வெளிர்ப்பழுப்பு நிறத்தில் வட்ட வடிவத்தில் அல்லது ஒழுங்கற்ற வடிவத்தையோ கொண்டு சிறு சிறு புள்ளிகள் இலைகளில் காணப்படும். சில சமயம் கருகிய புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து இலை முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். நோயினால் பாதிக்கப்பட்ட இலைகள் நொறுங்கி உதிர்ந்துவிடும். தண்டுகளிலும் நோயின் அறிகுறிகள் பார்க்க முடியும். இந்நோயை கட்டுப்படுத்த ஆரம்ப நிலையில், மான்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2 கிலோ 1 ஹெக்டருக்கு தெளிக்கவும். 15 நாட்கள் இடைவெளியில் 2 - 3 முறை தெளித்து கட்டுப்படுத்தலாம். அல்லது உயிரியல் முறையில் கட்டுப்படுத்த சுடோமோனாஸ் 5 கிராம், பேசில்லஸ் 5 கிராம், 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

முடிவுரை

பருத்தி சாகுபடியில் நுண்ணூட்ட சத்து பற்றாக்குயே அதிகம் வரும். அதனால் அதனை கண்டறிந்து, நிவர்த்தி செய்து அதிக வருமானத்தை பெருக்குவேண்டும். மேலும் மண் ஆய்வு பரிந்துரையின்படி, தேவையான சத்துக்களை அங்கக முறையில் வேண்டும். பருத்தி செடிகளில் நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை வேண்டும்.