வாழ்நாள் கல்வி

மடிநோய்க்கான அறிகுறிகளும் காப்பாற்றும் முறைகளும்

மடிநோய்

மடிநோய்க்கான அறிகுறிகளும் காப்பாற்றும் முறைகளும்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா (Bacteria)என்னும் நுண்ணுயிர்கள் மடிநோயை உண்டு பண்ணுகின்றன. இந்த நுண்ணுயிர்கள் சுத்தமில்லாத தொழுவத்தில் தேங்கும் சாணம் மற்றும் சிறுநீர்  கலவையில் நிறைந்திருக்கின்றன. அத்துடன் காம்புகளில் ஏற்படும் சிறுகாயங்கள்  வாயிலாகவும் இக் கிருமிகள்  காம்புத் துவாரத்தின் வழி பால் சுரப்பிகளை அடைந்து மடி நோயை உண்டு பண்ணுகின்றன. மடி வீங்கி பாலின் நிறம் மாறும் பொழுதுதான்  பசுவுக்கு மடி நோய் ஏற்பட்டிருப்பது நமக்குத்  தெரியவரும்.  ஆக்கிரமித்த நுண்ணுயிர்களின் வீரியத்திற்கும் மடியின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஏற்ப மடிநோயின் கொடூரம் வெளிப்படும்.

 

மடி நோய்க்கான அறிகுறிகள்

திடீரென மடி வீங்கும். பசுவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும். பசு  நடுங்கும். மடி  சூடாக  இருக்கும். இறுக்கமாகும். அதிகமான  வலி இருக்கும். மடியைத்  தொட்டால்  உதைக்கும். கன்றுக்கு  பால் ஊட்டாது. கால் தாங்கும். நடக்க இயலாது.  ஆரம்பத்தில்  பால் திரிந்து  வரும். சில  மணி  நேரத்தில் நீர்த்து  நிறம் மாறிவிடும்.மடி நோய்க்குக் காரணம் நுண்ணுயிர்கள் கண் திருஷ்டி அல்ல. 

 

மடி நோயின் நிலைகள்

மருத்துவ  ரீதியாக மடிநோயை  மூன்று  நிலைகளாய் வகைப் படுத்தலாம் அவை 

1 துணை மருத்துவ நிலை (Sub Clinical Mastitis)

அதாவது மருத்துவர் ஆலோசனையுடன் சரி  செய்யக் கூடிய நிலை. இந்நிலையில் பால் அளவு குறையும்,   பால் விரைவில் கெட்டு விடும். இந்த அறிகுறிகள் இருந்தால் நோய் கண்டறியும் அட்டையின்   உதவியுடன்   நோயை கண்டறிந்து சரி  செய்யலாம். பாதிப்பு குறைவாக இருக்கும்.  விரைவில் குணமடையும்.  .

2.  மருத்துவமனைக்கு  கொண்டு சென்று மருத்துவம் செய்ய வேண்டிய நிலை (Clinilcal   Mastitis)- பாதிப்புகளை சரி  செய்ய இயலும்.

3. தீவிரம் அடைந்த நிலை (Chronic  Mistitis)-  இந்நிலையில்  நோய்  மிகவும் தீவிரம்    அடைந்திருக்கும். பாதிப்புகள் அதிகமான இருக்கும்.

மடிநோயை கண்டறிய நோய் அறியும் அட்டைகள் தற்சமயம் மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. அந்த பட்டையில் கறவை செய்த பாலை 2 அல்லது 3 சொட்டு விட்டால் பாலின் நிறம் மாறும் அவ்வாறு மாறினால் மடி  நோய் தாக்கம் உள்ளது என்பதை நாம் அறியலாம். பாலின் நிறம் மஞ்சளாக இருந்தால் மடி நோய் இல்லை. நீல நிறத்துடன் கூடிய மஞ்சள்  நிறமாக மாறினால் சந்தேகத்திடமாக உள்ளது. மற்றும் பச்சை நிறமாக மாறினால் நோய் உள்ளது. நீல நிறமாக மாறினால் நோய் தீவிரமடைந்துள்ளது என உறுதி செய்யலாம். மேலும் CMT சோதனை மற்றும் DMCC சோதனைகள் வாயிலாகவும் நோயை உறுதி செய்யலாம்.

 

மடிநோய் கண்டறிந்த உடன் என்ன செய்ய வேண்டும் ?

உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பசுவை அழைத்துச் செல்லுங்கள் அல்லது நம்பிக்கையான மருத்துவரை வீட்டுக்கு அழையுங்கள், இதில் காலதாமதம் கூடாது. மந்திரிப்பதிலும் நேர்த்திகள்  செய்வதிலும் நேரத்தை வீணாக்காதீர்கள்.    

தொழுவத்திலிருந்து பசுவை அப்புறப்படுத்துங்கள். ஏன் எனில் மடி நோய் ஒரு தொற்றுநோய். மருத்துவர் வரும் வரை மணிக்கு ஒருமுறை பாதிக்கப்பட்ட காம்பிலிருந்து பாலை வெளியேற்றிக் கொண்டிருங்கள். இது நோயின் தீவிரத்தைக் குறைக்கும். மருத்துவர் உரிய மருத்துவம் செய்வார். தொடர்ச்சியாக நான்கைந்து நாட்கள் மருத்துவம் தேவைப்படும். மடி நோயால் ஏற்படும் பாதிப்பு அதிகம் மடிநோய் வராமல் தடுப்பதே விவேகம். பால் மடியைப் பாதுகாக்க  கீழ்கண்ட எட்டு வழி முறைகளை கையாளுதல் வேண்டும் அவை யாவன

 

மடி நோய் வராமல் இருக்க எட்டு வழிமுறைகள்

  • மாட்டுத் தொழுவத்தை சுத்தமாக வைத்திருத்தல்
  • மடி மற்றும் காம்புகளை சுத்தமாக வைத்திருத்தல்.
  • கறவையை  7 நிமிடத்தில் முடித்தல்
  • கறவைமுடிந்தவுடன் 40-45 நிமிடங்கள் பால் மாட்டை படுக்காமல் வைத்திருத்தல்.
  • கறவைக்குப் பின்னரும் மடியை பொட்டாசியம்  பர்மாங்னேட் கரைசல் கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.
  • 3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்தல்.
  • மடி நோய் தாக்குதலுக்கு உட்பட்ட பால் மாட்டை தனிமைப் படுத்துதல்.
  • சத்தான  உணவுகளை வழங்குதல்.
     

மடிநோய்க்கு மருத்துவம் செய்வது மிகமிக நுட்பமான பணி. மருத்துவம் படித்த மருத்துவர்தான் இந்தநோயைக் கையாள வேண்டும். மடி நோய்க்கு மருத்துவம் செய்வது யார்  அவரது தகுதி என்ன என்பதைப் தெரிந்து கொள்வது முக்கியம். போலிகளால் (Quacks) முறைகேடாகக் கையாளப்படுகிற பால்மடிகள் நிரந்தரமாக செயலிழந்து சோடை ஆகும். மடிக்கழலையாகவும் (Udder abscess) மாறலாம். மடிசோடையானால்  பசு பயனற்றதாகிறது.

 

நாட்டுவைத்திய முறையில் மடிநோயை கட்டுப்படுத்த கற்றாழைபூச்சு

மடிநோயை கட்டுப்படுத்த நாட்டு வைத்திய முறைகள் உள்ளன. அதில் கற்றாளை  பூச்சு தயாரித்து பயன்படுத்தும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருள்கள்

  • 250 கிராம் கற்றாழை
  • 50 கிராம் மஞ்சள் பொடி
  • 15 கிராம்  எலுமிச்சை பவுடர்
     

பயன்படுத்திய எலுமிச்சம் பழத்தோலை காயவைத்து பொடி செய்து கொள்ளலாம். 

தயார்  செய்யும் முறை  
      
கற்றாழையை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .நறுக்கிய கற்றாழையை மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் .அரைக்கப்பட்ட பசையுடன் மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சை பவுடரை சேர்த்து கலக்கி கொண்டு மடிநோய் பாதிக்கப்பட்ட மாட்டின் மடியை நன்கு சுத்தமான நீரினால் கழுவி அதன் பின் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்டாத காம்புகளில் உள்ள பால் முழுவதையும் வெளியேற்ற வேண்டும்.அதன் பின் அரைத்த கற்றாழை பசையுடன் தேவையான தண்ணீர் சேர்த்துக் கொண்டு மடி முழுவதும் தடவ வேண்டும் இவ்வாறு நாள் ஒனறுக்கு 10 முறை தொடர்ந்து 5 தினங்கள் செய்வதால் மடி நோய் தாக்கத்தில் இருந்து 50 சதவீதம் பால் மாட்டை காப்பாற்ற இயலும்..

 

தொகுப்புரை

மடிநோய் மாடு வளர்ப்பவர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் நோய் என்பதால் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். மடி நோய்க்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் மருத்துவம் செய்வதே நன்று. மேலும் குறிப்பாக மடிநோயை பரப்புவதில் பால் கறவையாளரின் (MILKING MAN] பங்கு அதிகம் எனவே சொந்தமாக கறவை (SELF MILKING) செய்வது மற்றும் பால் கறவை இயந்திரம் (MACHINE MILKING) கொண்டு பால் கறவை செய்வது சிறப்பானதாகும்