வாழ்நாள் கல்வி

காய்கறி சாகுபடி

தக்காளியில் புள்ளி வாடல் நோய்

காய்கறி சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

தக்காளி முக்கிய காய்கறிப்பயிர்களில் ஒன்று. இதனை எல்லா பட்டத்திலும் எல்லா வகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம். தக்காளி சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும். தக்காளி பயிரை அதிக பூச்சியும், நோயும் தாக்குகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது

 

தக்காளியில் புள்ளி வாடல் நோயின் அறிகுறி

தக்காளியில் புள்ளி வாடல் நோய் ஒரு நச்சுயிரியினால் (வைரஸ்) உருவாகிறது. இந்நோய் பாதிப்பால் இலைகளில் கருப்புநிறப் புள்ளிகள் தோன்றி பின் இலைகள் கருகி விடும். பழங்களின் மேலும் கருகிய வளையங்கள் ஏற்படும். இலையிலுள்ள நரம்புகள் கத்தரிபூ நிறத்தில் பெரிதாக காணப்படும். தண்டுகளில் பழுப்பு நிற ஒழுங்கற்ற புள்ளிகள் தோன்றும். செடி தடித்து விரைப்புடன் இருக்கும். செடி மேலிருந்து கீழாக காய்ந்து வாடி விடும். இந்நோய் இலைப் பேன் மூலம் பரவுகின்றது இதனால் 75 சதவீத செடிகள் பாதிப்படைகிறது. அதனால் இலைப் பேன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நச்சுயிரிகளின் தாக்குதலை குறைக்கலாம்.

 

 

இலைப்பேன் தாக்கம்

இளம் குஞ்சுகளும், வளர்ச்சியடைந்த பேன்களும் இலைகளின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும். தாக்கப்பட்ட இலைகளின் மீது வெண்மைநிற புள்ளிகள் காணப்படும். இந்த பூச்சி புள்ளி வாடல்நோயை பரப்புகிறது.  இலைப்பேன் வெளிர் மஞ்சள் நிறத்துடன் சீப்பு போல் பிளவுபட்ட இறக்கைகளுடன் காணப்படும். தாய் பூச்சியானது, இலைகளில் ஒரு வெட்டு பகுதியை உண்டாக்கி அதனுள் முட்டை இடும்.

 

 

இலைப்பேனை கட்டுப்படுத்தும் முறைகள்

இலைப்பேன் தாக்கப்பட்ட பயிர்களை சேகரித்து அளித்து விடவேண்டும். பின்னர் மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகள் ஒரு ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் கட்டிவைத்து இலைப்பேன்களை கட்டுப்படுத்தலாம். அல்லது வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய் மற்றும் புங்கம் எண்ணெய் கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். அல்லது இராசயண முறையில் கட்டுப்படுத்த அசிபேட் 2 கிராம், 1 லிட்டர் தண்ணீர் (அ) இமிடாகுளோபிரிட் 0.5 சதம் தெளிக்க வேண்டும். தோட்டத்தை சுற்றி சோளத்தை வரப்பு பயிராக சாகுபடி செய்ய வேண்டும்.

 

புள்ளி வாடல் நோயை கட்டுப்படுத்தும் முறை

புள்ளி வாடல் நோய் வராமல் தவிர்க்க ஊடுபயிராக சோளம், கம்பு மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்களை 5 வரிசைக்கு ஒரு வரிசை விதைக்கவும்.  தக்காளி வயலை சுற்றி செண்டுமல்லி மற்றும் சாமந்தி பூ பயிர்களை வளர்க்கவும். மேலும் நுண்ணூட்ட சத்துகள் பயிர்வளர்ச்சி ஊக்கிகள் தெளித்து பயிரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம். பஞ்சகாவியாவை தொடர்ந்து தெளிப்பதன் மூலம் செடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம். பஞ்சகாவியாவில் உள்ள லாக்டோ பேசில்லஸ் பாக்டீரிய நோயின் தாக்கத்தை குறைக்கிறது. அதேபோல் தொடர்ந்து சூடோமோனாஸ் 5 கிராம், பேசில்லஸ் 5 கிராம் 1லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிப்பதால் நோய் தாக்கத்தை குறைக்க முடியும். நோய் பாதித்த செடிகளை பிடுங்கி நிலத்திலிருந்து தூரத்தில் கொண்டு சென்று தீயிட்டு அழித்துவிட வேண்டும்

 

முடிவுரை

தக்காளியில் நோய் மற்றும் பூச்சியின் தாக்கம் வராமல் இருக்க நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து நடவு செய்யவும். அதேபோல் பந்தல் முறை சாகுபடியை பின்பற்றினால் நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.