வாழ்நாள் கல்வி

காய்கறி சாகுபடி

முருங்கையில் பழ ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை

காய்கறி சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

தமிழ் நாட்டில் முருங்கை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது குறிப்பாக திண்டுக்கல், கரூர், தேனி, தாராபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலயம் பி.கே.எம் 1 என்ற செடி வகை முருங்கை இரகங்களை வெளியிட்டது. இந்த ரகங்கள் விதை மூலம் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்கிறார்கள். 

 

முருங்கையில் பழ ஈ தாக்குதல்

பழ ஈ முருங்கை காய்களில் முட்டையிடும் இதில் இருந்து இரண்டு நாளில் வெளிவரும் இளம் புழுக்கள் காய்களை துளைத்து விதை மற்றும் சதைப் பகுதியினை உண்ணும். இவ்வாறு தாக்கப்பட்ட காய்களில் பிசின் போன்ற திரவம் வெளிவரும். பின்பு காய்கள் நுனியிலிருந்து காய்ந்து பிளவுபட்டு இருக்கும்.  அழுகிய காய்கள் ஈக்களை கவருவதால்  தாக்கப்பட்ட காய்களை உடனே சேகரித்து அழித்துவிட வேண்டும். 

 

பழ ஈக்களின் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை

பழ ஈக்களின் பாதிப்பு முருங்கை காட்டில் தென்பட்டால் அவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த பழ ஈக்களை கவரக்கூடிய இனக்கவர்ச்சி பொறியை ஏக்கருக்கு 5 முதல் 6 என்ற எண்ணிக்கையில் நிழல் பகுதியில் ஆடாமல் கட்டிவைத்து பழ ஈக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.  அல்லது நிம்பிசிட் 3 மி.லி 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து 50 சதவீதம் காய் காய்த்தவுடன் மற்றும் 35 நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும்.

 

இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தும் முறை

பழ ஈக்களை கவரக்கூடிய இனக்கவர்ச்சி பொறிகளை முருங்கை காட்டில் பூ பூக்கும் காலம் தொடங்கி அறுவடை காலம் வரை பயன்படுத்த வேண்டும். இந்த இனக்கவர்ச்சி பொறிகளில் உள்ள லூர் பழ ஆண் ஈக்களை கவர்ந்து இழுக்கிறது. கவர்ந்திழுக்கப்பட்ட ஆண் ஈக்கள் பொறியில் விழுந்து இறந்துவிடும். இதனால் இனப்பெருக்கம் தடைபெற்று பூச்சிகளின் தாக்கம் குறைந்துவிடும். இந்த இனக்கவர்ச்சி பொறிகளில் உள்ள லூர்களை மட்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இறந்த பூச்சிகளை 1 அடிக்கு கீழ் மண்ணில் புதைத்துவிட வேண்டும்.

 

பழ ஈ தாக்குதலை இரசாயன முறையில் கட்டுப்படுத்தும் முறை

முருங்கை காய்களை சேதப்படுத்தும் பழ ஈக்களை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி மோனாகுரோட்டபாஸ் மருந்து 1 மில்லி டைகுளோரவாஸ் என்ற அளவில் கலந்து மாலை வேலையில் தெளித்து கட்டுப்படுத்தலாம். அல்லது மாலத்தியான் அல்லது டைமீதோயேட் 2 மில்லி, 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

முடிவுரை

முருங்கை சாகுபடியில் பழ ஈக்களை இரசாயண முறையை விட இயற்கை முறையே மிகவும் நல்லது. முருங்கை காடு முழுவதும் இரசாயண மருந்துகளை தெளிப்பது சற்று கடினம். அதனால்  இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தி பழ ஈக்களை கட்டுப்படுத்தவும்.