வாழ்நாள் கல்வி

கால்நடை வளர்ப்பு

கால்நடைகளுக்கான காப்பீடு

கால்நடை வளர்ப்பு

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பொதுவாக வங்கிகள் மூலம் கடன் பெறும் கால்நடைகளுக்கு மட்டுமே காப்பீடு செய்யும் வழக்கம் நம்மிடையே உள்ளது.இது முற்றிலும் தவறான நடைமுறையாகும். பசுமாடு, எருமைமாடு, செம்மறிஆடு, வெள்ளாடு, கோழி, காளைமாடுகள் என அனைத்து வகையான கால்நடைகளுக்கும் அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வாயிலாக காப்பீடு செய்து பயன் பெறலாம்.

 

காப்பீட்டின் வகைகள்

1. இழப்புக் காப்பீடு
2. ஊனக் காப்பீடு
3. இடமாற்ற காப்பீடு என மூன்று வகைப்படும்.

 

இழப்புப் காப்பீடு (Indemnity) 

காப்பீடு செய்யப்பட்ட கால்நடை நோய்வாய்ப்பட்டு இறந்தால், விபத்து, விஷக்கடி இயற்கை விபத்துக்களால் (நெருப்பு, மின்னல், இடி, மழை, வெள்ளம், சூறைக்காற்று, மற்றும் கொட்டகை தரை மட்டமாகி விழுந்து விடுதல், பாறை மற்றும் மலைச் சரிவுகள், நீர் தேக்க தொட்டி அல்லது குழாய் வெடித்தல், பூகம்பம், நிலச்சரிவு, பெருமளவில் தண்ணீர் தேங்கி) இறந்தால், அறுவை சிகிச்சை செய்யப்படும் போது அல்லது அதன் பின்னர் இறக்க நேரிட்டால், கலவரங்கள் மற்றும் போராட்டங்களினால் இறக்க நேரிட்டால் காப்பீட்டு இழப்பீட்டுத்  தொகை பெற இயலும்.

ஊனக் காப்பீடு  (Permanent Total Disability)

இது தொடர்பான விழிப்புணர்வும் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை என்றே கூறலாம். இத்தகைய காப்பீடு செய்யப்பட்ட கால்நடை இழப்புக் காப்பீட்டில் குறிப்பிட்டுள்ள மரணத்துடன்  பசுக்கள், எருமைகள் சினை பிடிக்காமல் இருந்தால், மடி நோய் தாக்குதலால் காம்பு சோடையாகி போனால், பொலிகாளைகள் நிரந்தரமாக இனப் பெருக்கம் செய்ய இயலாதநிலை ஏற்பட்டால் மற்றும் வண்டி மாடுகள் உழவு மாடுகள்  கன்றுகள்  ஆகியன நிரந்தர ஊனம் ஏற்பட்டால்.  இழப்பிற்கு தகுந்தவாறு காப்பீட்டு இழப்பீடு பெற இயலும். மேலும் இக் காப்பீட்டில் இழப்பீடு பெற மருத்துவம் செய்த மருத்துவ ஆவணங்கள் மிகவும் முக்கியமானதாகும்.

இடமாற்ற  காப்பீடு  (Transist Cover)

கால்நடைகளை ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் போது இத்தகைய காப்பீடு செய்து கொள்வது அவசியமாகும். மேலும் 80 கிலோ மீட்டருக்கு மேல் இடமாற்றம் செய்யப்படும் கால்நடைகளுக்கு இக் காப்பீடு செய்வதன் மூலம் பயன் பெறலாம்.

 

காப்பீடு செய்வதற்கான வழிமுறைகள்

காப்பீடு செய்வதற்கான வயது

1.  கறவைப் பசு நாட்டினம், கலப்பினம், அயலினம்  2 முதல்  10 வயதுவரை
2.  கறவை எருமைகள்  3 முதல் 12 வயது வரை
3.  பொலிகாளைகள்  3  முதல் 8 வயது வரை
4.  வண்டி மற்றம் உழவு மாடுகள் 3 முதல் 12 வயது வரை
5.  கிடேரிக் கன்றுகள் 4 மாதம் முதல் கன்று ஈனும் வரை 

இந்த வயது வரம்பிற்குள் இருக்கும் கால்நடைகளை மட்டுமே காப்பீடு செய்ய இயலும். காப்பீடு செய்யப்படும் கால்நடையை மதிப்பீடு செய்வதில் இனம், வயது,   இடம் ஆகியன முக்கிய அம்சங்களாக கொள்ளப்படும். காப்பீடு செய்யும் போது கால்நடையில் மதிப்பிற்கு மேல் காப்பீடு  செய்ய இயலாது.

 

காப்பீடு செய்யத் தேவையானவை

1.   தகுதி வாய்ந்தகால் நடைமருத்துவரின் சான்றிதழ்.

2.   அடையாளவில்லை. (Tag) 

3.   கால்நடையின் வயது, நிறம், அங்க அடையாளங்கள்.
 
4.   கொம்புகளின் அளவு  மற்றும்  கொம்புகளுக்கு  இடையே  உள்ள
      இடைவெளி ஆகியன காப்பீடு     செய்யத் தேவையானவை.

5.   மேலும் காப்பீடு  செய்யப்பட்ட  கால்நடையின் புகைப்படம் உரிமையாளருடன்

 

இழப்பீடு

  1. இழப்புக் காப்பீடு செய்யப்பட்ட கால்நடை இறந்துவிட்டால் இறந்த உடன்     காப்பீட்டு நிறுவனத்திற்கு   முறையான தகவல் தெரியப் படுத்தப்பட வேண்டும்.
     
  2. வங்கியில் கடன் பெற்றிருந்தால் வங்கிக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.   மேலும் இழப்பீட்டுப் படிவம்   வங்கியின் மூலமே காப்பீட்டு நிறுவனத்திற்கு    அனுப்பப்பட வேண்டும்.
     
  3. பதிவு பெற்ற மருத்துவரின் மூலம் பிரேத பரிசோதனை செய்து உரிய சான்றிதழ் பெறவேண்டும்.
     
  4. சான்றிதழுடன் காதில் அணிவித்திருந்த காதுவில்லை சமர்ப்பிக்கப்பட  வேண்டும்.
     
  5. பிரேத பரிசோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப் படங்கள் இணைக்கப்பட வேண்டும்.
     
  6. காப்பீட்டு நிறுவனம் தேவை எனக் கருதினால் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபரின் மூலம் ஆய்வு  செய்து 60 தினங்களுக்குள்  இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
     

மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவைகள்
 

  1. காதுவில்லை  இல்லையேல் இழப்பீடு இல்லை (No Tag No Claim)
  2. கால்நடை இறந்த உடன் தகவல் தெரிவித்தல்.
  3. பதிவுபெற்ற   மருத்துவரை   வைத்து  மட்டுமே  பிரேத  பரிசோதனை  செய்தல்
  4. தேவையான  ஆவணங்களை  சரியான  நேரத்தில் சமர்ப்பித்தல்.
 

தொகுப்புரை

கால்நடை வளர்ப்போர்க்கு கால்நடை இறப்பு என்பது மிகப் பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும். வங்கியில்  கடன் பெற்று இருப்பின் மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே அனைத்து தகுதி வாய்ந்த கால்நடைகளையும் காப்பீடு செய்வதுடன் காப்பீட்டுவில்லை காப்பீடு முடிவடையும் நாள் போன்றவற்றில் அதிகக் கவனத்துடன் இருத்தல் அவசியம்.