உழவர் குரல்

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்

மல்லிகை சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்

Aug 7, 2020


மல்லிகை சாகுபடி செய்வதை மாற்றி 30 சென்ட் நிலத்தை 5 டன் தொழுவுரம் இட்டு நன்கு உழவு செய்தேன். கடேசியில் ரொட்ட வேட்டர் விட்டு நிலத்தை சமன் செய்தேன். வரிசைக்கு வரிசை 5 அடியும் செடிக்கு செடி 4 அடி என்ற அளவில் குழி எடுத்து ஒரு குழியில் 3 நாற்றுக்கள் நடவு செய்தேன்.


ஜி.எம்.எஸ் 145 கருப்பு களைப்பாய் வாங்கி அனைத்து நிலங்களிலும் மூடும்படி காட்டை மூடி விட்டு குழி எடுக்கும் இடத்தில் பாயை வெட்டிவிட்டு செடிநடவு செய்தேன்.அதன்மேல் சொட்டு நீர் பாசன பைப்பையும் போட்டுவிட்டேன். இராமநாதபுரம் குண்டுமல்லி நாற்று ரகம் திண்டுக்கல் பகுதிக்கு ஏற்றது அவற்றையே நடவு செய்தேன்.


நாற்றின் வேர் பகுதி அதிகமாக இருக்கும் பட்சத்தில் அரை அடி மட்டும் வைத்துக்கொண்டு மீதம் உள்ள வேர்பகுதியை வெட்டிவிட்டு நடவு செய்தேன்.
நடவு செய்த முப்பது நாட்களுக்கு மேல் செடி துளிர்விட்டு நல்ல பசுமையாக இருந்ததால் உரம் போடவில்லை.


அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2கிலோ, பொட்டாஷ் பாக்டீரியா 2 கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ, சூடோமோனஸ் 2 கிலோ வேம் ( மைக்கோரைசா) 2 கிலோ 500 கிலோ தொழுவுரத்தில் கலந்து வயல் ஈரமாக இருக்கும் பொழுது அனைத்து செடிகளுக்கும் சமமாக செடியின் வேர்ப்பகுதி அருகில் போட்டு விட்டேன்.இதேபோல மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இவ்வாறு போட்டு வந்தேன்.


மல்லிகையில் சிம்பு நீக்குதல்


மல்லிகை நடவு செய்த 90 நாளில் பெரிய இலையுடனும், நீண்ட கிளையுடனும் செடியின் அடிப்பகுதியில் முளைத்து வரும் கிளையை ஒடித்து விட்டேன்.
தொடர்ந்து 20 நாட்களுக்கு ஒருமுறை கிளையை ஒடித்து விட்டு வந்தேன். இவ்வாறு செய்வதால் செடியில் பக்க கிளைகள், வளர்ச்சி அதிகரித்தது. பூக்களும் அதிகம் பூத்தது பூ நல்ல தரமான பூவாகவும் வந்தது.


பூச்சி மேலாண்மை


மல்லிகையில் மொட்டு பூ வரும். பூவைப் பார்த்தால் சிவப்பு நிறத்தில் இருக்கும். அவற்றை எடுத்து பிரித்து பார்த்தால் உள்ளே சிறிய புழு இருக்கும். இவை பூ மொட்டாக இருக்கும் போது வெள்ளை நிறத் தாய்ப்பூச்சி பூவுக்குள் முட்டை வைத்து விடும். இவை வைத்த இரண்டு மூன்று நாட்களிலேயே பூ சிவப்பாக மாறிவிடும். இவற்றை கட்டுப்படுத்த எபாமேக்டின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து மாலை நேரத்தில் தெளித்தேன். வாரம் ஒரு முறை இவ்வாறு தெளித்து வந்தேன்.


இலைப்பேன் தாக்குதல்


மல்லிகையில் கோடைகாலத்தில் இந்த செம்பேன் விழுந்தது. இவை இலையின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு இலையில் உள்ள சாற்றை உறிஞ்சி விடும் பூக்கள் பூக்காது.ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒபிரான் என்ற மருந்தில் 3 மில்லி தெளித்தேன் இவை இல்லா விட்டால் ஓமைட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து இவற்றுடன் ஒட்டும் திரவம் சேர்த்து மாலை வேளையில் தெளித்து கட்டுபடுத்தினேன்.


வெள்ளை ஈ


இதுவும் கோடைகாலத்தில்தான் அதிகமாக தாக்குதல் இருக்கும். இலையின் சாற்றை உறிஞ்சி விடும் செடி பச்சையம் இழந்து காணப்படும். பூ வின் இதழ்கள் சிறிதாகி பூ சிறுத்து விரிந்து காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த செடியில் உள்ள அடி இலைகளை அகற்றினேன். மேலும் பிரைடு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து மாலைவேளையில் தெளித்து வந்தேன்.


நுண்ணூட்டம் பாற்றாக்குறை


பொதுவாக மல்லிகைச் செடிக்கு போரான், பெரஸ், இரும்புச் சத்துக்கள் தேவைப்படும். இலைவழியாக ஒரு லிட்டர் தண்ணீருக்கு பெரஸ் சல்பேட் 10 கிராம் போரான் 10 கிராம் கலந்து செடி நன்கு நனையும்படி தெளித்தேன்
இவ்வாறு மாதத்திற்கு ஒருமுறை தெளித்தேன். பூவின் தரமும் கலரும் நன்றாக இருந்;தது. பூவின் காம்புகளும் பசுமையாக நீண்டும் இருந்தது.
மார்க்கெட்டில் நல்ல விலையும் கிடைத்தது.


பெரஸ்சல்பேட், போரான் வயலில் செடிக்கு அருகில் வைக்க வேண்டும் என்றால் ஒரு செடிக்கு பெரஸ்சல்பேட் 50 கிராம் போரான் 20 கிராம் என்ற அளவில் கலந்து செடியின் தூருக்கு அருகில் வைத்து தண்ணீர் பாய்ச்சலாம்.
மல்லிகைக்கு செடி வாடுகிற மாதிரி இருந்தால் தண்ணீர் உடனே பாய்ச்சிவிடுவேன். 


தொடர்புக்கு 
கலைச்செல்வன்
9787787432